வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் சிலைகள் மீண்டும் நிறுவப்படும்

92 0

வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சினையில் நடந்திருப்பது தவறு அது யார்  செய்திருந்தாலும் தவறு மீண்டும் வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும். அதற்கு ஆளுநருடையதோ பிரதமருடைய அனுமதியோ பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மத்திய வீதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தன் தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற கட்சி காரியாலய திறப்பு விழாவில்  கட்சி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  சம்பிரதாயபூர்வமாக காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இன்றைய நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளை தனிப்பட்ட முறையில் அழைத்த போது ஒரு கட்சியை தவிர ஏனைய எதிர்கட்சிகள் தேர்தல் வேண்டாம் என முன்வைத்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக யாரும் செயற்படமாட்டர்கள்.

 

1990 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை புலிகள் எதிர்த்தனர். ஆனால் நாங்கள் இதன் ஊடாக பிரச்சனையை தீர்க்க முடியும் என தெரிவித்தோம். அதனை மறுத்து துரோகத்தனம் என்றனர் இன்று என்ன நடந்தது தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்ற மாதிரி நடந்திருக்கின்றது.

நானும் 30 வருடமாக நாடாளுமன்றத்தில் இருந்துவருவதால் எனக்கும் அங்கிருக்க கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளும் புறமும் தெரியும். எனவே பொருத்தமான நிலையில் தேர்தல் வரும் உரிய நேரத்தில் தேர்தல் நடாத்தப்படும்.

அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டம் உலகத்திலே எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் இருக்கின்றது. ஆனால் பெயர்கள் வித்தியாசப்படலாம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று அந்த நிலமை இல்லை. ஆனால் நாட்டை நிர்வகிப்பதற்கு சட்டம் தேவை என்றார்.