ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட மிரிஹான உப பிரிவில் கடமையாற்றும் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கான்ஸ்டபிளுடன் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 74 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புறக்கோட்டை சிறிகொத்த கட்டிடத்திற்கு முன்பாக காரில் பயணித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர், புறக்கோட்டை டெய்சி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளின் போது, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளின் ஒருங்கிணைப்புடன், மாத்தறை வெலிகம பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஊடாக ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் இரண்டு கையடக்க தொலைபேசிகளுடன் மிரிஹான பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.