உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, குற்றவாளிகளுக்கு தண்டனையோ கிடைக்கப் போவதில்லை

99 0

யிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. எனினும், இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும், குற்றவாளிகளுக்கு தண்டனையையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

எதிர்காலத்திலும் தீர்வு கிடைக்காது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி காணப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பிறகு, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தரப்பினருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இன்று வரையில் அவரும் மௌனம் காக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தீவிரவாத முஸ்லிம் குழுவொன்று நடத்தியதாக கூறப்பட்டாலும், நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை கொண்டு வருவதற்காகவே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதல் இடம்பெற்று 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதில் இன்று வரையில் இழுபறி நிலை காணப்படுகிறது. இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள் இருப்பதையே இது பிரதிபலிக்கிறது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உண்மைகளை கண்டறிய முன்னதாக காணப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பதிலாக புதிய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரவை கைதுசெய்ததுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ரவி செனவிரத்னவையும் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

இவ்வாறு உயர் அதிகாரிகளை விரட்டி தமக்கு சாதகமான புதியவர்களை பதவிகளுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த புதிய குழுவினரால் இன்று வரையில் எதுவித உண்மைகளும் கண்டறியப்படவில்லை.

இதேவேளை மூன்றாவது முறையாக சாராவின் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. காரணம், இவ்வளவு காலம் கண்டறியப்படாத இவ்விடயம் தற்போது திடீரென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாருடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக மூன்றாவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது?

நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அப்பாவி மக்களின் உயிரை பறித்தனர். இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி மோதலை உருவாக்கினார்கள். இந்த மோதல்களின் போதும் கலவரங்களின் போதும் பலர் உயிர், சொத்துக்கள், உடமைகள் என பலவற்றை இழந்தனர்.

எதை எதிர்பார்த்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோ, அதனை சிலர் நிறைவேற்றிக்கொண்டார்கள். இனவாதத்தின் ஊடாக ஆட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்காகவே மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை மக்களும் தற்போது புரிந்துகொண்டுள்ளார்கள்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பிறகு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தரப்பினருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இன்று வரையில் அவரும் மௌனம் காக்கிறார்.

எதிர்காலத்தில் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதுமில்லை. தாக்குதல் மேற்கொண்ட தரப்பினருக்கு தண்டனை கிடைக்கப் போவதுமில்லை என்றார்.