மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று (9) உயிர்த்த ஞாயிறு தின சிறப்பு ஆராதனைகள் பொலிஸ் பாதுகாப்போடு இடம்பெற்றன.
தேவாலயத்தின் பிரதம போதகர் றொசான் மகேசன் தலைமையில் இவ்வாராதனைகள் நடைபெற்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலயமும் இலக்காகி, பாரியளவில் சேதமடைந்து, அதில் உயிரிழப்புகள் நேர்ந்ததோடு, மேலும் பலர் பாதிப்படைந்திருந்தனர்.
அதன் பின்னர், இந்த சீயோன் தேவாலயம் மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் உள்ள மென்றேசா வீதியில் அமைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலுக்கு பிறகு இம்முறை உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் ஆராதனைகள், விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் பிறிதொரு இடமான பிள்ளையாரடியில் அமைக்கப்பட்ட சீயோன் தேவாலயத்திலும் இன்று உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது நல்லாசி உரைகள், நாடும் அரசாங்கமும் சிறப்புற வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தேறின.
அதனையடுத்து, போதகரால் உயிர்த்த ஞாயிறு செய்தி வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.