ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்வாறான விடயங்கள் கூறப்பட்டாலும் நியாயம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நியாயத்தை நிலைநாட்டும் நடவடிக்கை தாமதமாகுதல் அநீதிகளுக்கு பொறுப்பு கூறுதல் ஆகிய விடயங்களுக்கு உரிய நடைமுறைகள் இல்லாமல் பிற்போகின்றமையானது நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை நிலைநாட்டுவதில் பிரச்சினைகளை உருவாக்கும் என மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதிக்கு மாத்திரமே இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக செய்ட் ராட் செய்ட் அல் ஹூசைன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட பிரதி வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் அடிப்படைவாத குழுக்களுடன் போராட்டங்களை நடத்தி நல்லிணக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
அத்துடன், ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றும் அரசாங்கம் என்றவகையில் இலங்கை அரசாங்கம் முகம்கொடுத்துவரும் பிரச்சினைகளை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.