கடலுக்கு அடியில் ‘மீண்டும் ஏவுகணை சோதனை’ செய்தோம்: வடகொரியா

94 0

கடலுக்கு அடியில் மீண்டும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

ஹெய்ல்-1 என்று அழைக்கப்படும் அணு ஆயுத சோதனையை கடலுக்கு அடியில் கடந்த வாரம் வடகொரியா நடத்தியது. இதற்கு உலக நாடுகளிடம் கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

இதற்கு ஹெய்ல் -2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகள் கடலுக்கு அடியில் செலுத்தும்போது செயற்கையான சுனாமி அலைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஹெய்ல் -2 ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து வடகொரியாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 4 முதல் 7 – வரை ஏவுகணை சோதனைகளை நடத்தியதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா வெளியிட்ட அறிவிப்பில், “ நீருக்கடியில் எங்களுடைய ஏவுகணையின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் ஆய்வுக்குபின் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அமெரிக்க – தென்கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகவே ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இரு நாடுகளும் மிகப் பெரிய ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான், வடகொரியா தொடர்ந்து எவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா – தென்கொரியாவின் ராணுவப் பயிற்சிக்கு எதிர்வினையாக மார்ச் மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் (செயற்கை சுனாமி) சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது வடகொரியா.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.