வேலூர், நெய்வேலி விமான நிலையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: 2013-14-ல் 6 கோடி பேர் மட்டுமே விமானங்களில் பயணித்து வந்தனர். தற்போது 14.50 கோடி பேர் விமானங்களில் பயணிக்கின்றனர். கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4.20 லட்சம் பேர் பயணித்து வந்த நிலையில், தற்போது 4.55 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கடந்த 65 ஆண்டுகளில் 74 விமான நிலையங்களே கட்டப்பட்டன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 200 விமானநிலையங்கள், ஹெலிபேட் போன்றவற்றை அமைக்க இருக்கிறோம். சென்னையில் உலகத் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம்.
தற்போது இங்கு தொடங்கப்பட்ட முனையம் மூலம் பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்கும். புதிய முனையத்தின் 2-வது பகுதி அமைக்கப்பட்ட பிறகு அது மேலும் அதிகரிக்கும். அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளில் 3.50 கோடி அளவில் பயணிகளை கையாண்டு சாதனை படைக்க வேண்டும்.
நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் 22 கோடி விமான பயணிகள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 42 கோடியாக அதிகரிக்கும்.
உடான் யோஜ்னா திட்டத்தில் சேலம் விமான நிலையம் இயங்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வேலூர், நெய்வேலி விமான நிலையங்களும் ஓரிரு மாதங்களில் இயங்க தொடங்கும். தமிழகத்தில் மேலும் 12 வழித்தடங்கள் புதிதாக தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசினார்.