வேலூர் மாவட்டத்தில் கேலிவதை தடுப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.
பகடிவதை என்பது பேச்சுரீதியான துன்புறுத்தல், உடல்ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகும். உடல்ரீதியான துன்புறுத்தல் இறப்பிற்கும் காரணமாவதுண்டு. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் கேலிவதை தடுக்கும் குழு, கேலிவதை தடுக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தவேண்டும். கேலி செய்வது பற்றி புகார் அளிக்கும் பொருட்டு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்ட விளம்பர பலகைகள் கல்வி நிலைய வளாகங்களிலும் நன்கு தெளிவாக தெரியக்கூடிய இடங்களில் வைக்கவேண்டும்.
கல்லூரி வளாகத்தின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மாணவ- மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சேரும் மாணவ- மாணவிகளிடத்தில் கேலிவதை போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியைபெற வேண்டும். கேலிசெய்வதை தடுப்பது தொடர்பாக கவுன்சிலிங், ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
கேலிசெய்வது தொடர்பாக புகார் தெரிவிக்க புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டிகளை கல்லூரிகளில் வைக்கவேண்டும். கேலிசெய்தலை தடுத்தல் தொடர்பாக புகார்களை அளிக்க மாணவ- மாணவிகளின் அடையாள அட்டைகளில் இணையதள முகவரி www.antiragging.com மற்றும் இலவச தொலைபேசி எண் 1800-180-5522 ஆகியவற்றை அச்சிட்டு வழங்கவேண்டும்.
கேலிசெய்வதை கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கவேண்டும். முதல் முறையாக கேலி செய்யும்போது சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை நேரடியாக அழைத்து தக்க அறிவுரை வழங்கவேண்டும். இரண்டாவது முறையாக கேலிசெய்யும் குற்றத்தை செய்யும் மாணவரிடமிருந்து கல்லூரி அடையாள அட்டை மற்றும் பஸ்கட்டண சலுகை அட்டையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 3-வது முறையாக கேலிசெய்யும் மாணவர்களை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் நேரடியாக விசாரணை நடத்தி தக்க சாட்சிகளின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
எந்த ஒரு மாணவ- மாணவியும் கேலிவதைக்கு ஆளாகாமல் இருக்க உரிய கண்காணிப்பையும், ஆலோசனைகளையும் மூத்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் கலெக்டரை 94441 35000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேற்கண்டவாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர், கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஜெயராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கநாயகி, குற்றவியல் தாசில்தார் பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.