ஹஷிஸ் போதைப்பொருளுடன் 3 இந்திய பிரஜைகளுடன் படகு ஒன்று கடற்படையினரால் தலைமன்னார் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
தலைமன்னாரைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான படகை பரிசோதித்துள்ளனர்.
இதன்போது, குறித்த படகில் இருந்த 3 பைகளில் 95 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 92 கிலோ கிராம் நிறையுடைய ஹஷிஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 92 மில்லியன் ரூபாவென கடற்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் படகு மற்றும் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.