பிரதமர் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கண்காணிப்பு குழு நியமனம்

137 0

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு பொறுத்தமான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்ன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என்போர் உள்ளடங்குகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே அவற்றின் அடுத்த கட்ட செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வெவ்வேறு வேலைத்திட்டங்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லல் , குறித்த நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடுகளை நிர்வகித்தல் , சகல நடவடிக்கைகளையும் கண்காணித்தல் மற்றும் பராமறித்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் மற்றும் வழிமுறைகளை இக்குழுவின் ஊடாக செயற்படுத்துவதற்கு கடந்த வாரம் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து வெளியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன ,

கடந்த 10 மாதங்களில் எதிர்கொண்ட பின்னடைவிலிருந்து நாடு தற்போது சீராகி முன்னேறியுள்ளது. நிதி நெருக்கடி , புதிய நியமனங்களை வழங்குதல் தொடர்பான சுற்று நிரூபம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுற்று நிரூபங்கள் மற்றும் நேரடி அறிவிப்புக்கள் மூலம் அனைத்து மாவட்ட குழுக்களினதும் இணை தலைவர்களாக ஆளுனர்களை நியமித்துள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அன்றாட நடவடிக்கைகளை இக்குழுக்களின் ஊடாக முன்னரைப் போன்றே முன்னெடுத்துச் செல்லப்படும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் இவற்றைப் பின்பற்ற வேண்டும்.

அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக ஆளுனர்கள் இதில் பங்கேற்பார்கள். மாவட்ட அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இவை தொடர்பில் ஆழமாக அவதானம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 24 மணித்தியாலங்களும் செயற்படும் பிரிவு ஸ்தாபிக்கப்படும். இது தொடர்பில் அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களின் அவதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றின் தலைவர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும்.

அலுவலகத்திற்கு சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மக்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் அமைப்பு காணப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் இந்த நிறுவனங்களின் மூலம் அன்றாட செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

எதிர்க்கட்சியினருக்கும் மாவட்ட குழுக்களில் பங்குபற்ற முடியும். பிரச்சினைக்குரிய விடயங்கள் தொடர்பில் மாவட்ட அதிபர்கள் அவதானத்துன் செயற்பட வேண்டும். மாகாணசபைகளின் செயற்பாடுகளும் , அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் இதன் ஊடாகவே இடம்பெறும் என்று தெரிவித்தார்.