இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி 8ஆம் திகதி வரை கொழும்பில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது. இதில் முதற்கட்டமாக 3ஆம் திகதி முதல் நேற்று வரையில் துறைமுக மட்டத்திலான பயிற்சிகள் கொழும்பிலும் இன்று முதல் 8ஆம் திகதி வரையில் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடல்சார் பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். கில்தான் ( அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு கடற்படைக் கப்பல்) மற்றும் ஐ.என்.எஸ். சாவித்ரி (ரோந்துக் கப்பல்) ஆகிய கடற்படை கப்பல்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அதேநேரம் இலங்கை கடற்படையானது எஸ்.எல்.என்.எஸ். கஜபாகு ( அதிநவீன ரோந்துக் கப்பல்) மற்றும் எஸ்.எல்.என்.எஸ். சாகரா ஆகியவற்றால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக இந்திய கடற்படையின் செத்தக் ஹெலிகொப்டர் மற்றும் கடல் ரோந்து பணிகளுக்கான டோனியர் விமானமும் இலங்கை கடற்படையின் டோனியர் விமானம் மற்றும் பெல் 412 ரக ஹெலிகாப்டர் ஆகியவையும் இப்ப பயிற்சியில் கலந்துகொள்கின்றன. இரு கடற்படையினரதும் விசேட படைகளும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதான இப்பயிற்சி கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை விசாகபட்டினத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருநாடுகளினதும் கடற்படையினரின் இயங்குதிறன் மேம்பாடு, பரஸ்பர புரிந்துணர்வினை மேம்படுத்துதல், கடல் மார்க்கமான பன்முக செயற்பாடுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் சிறந்த செயல்முறைகளை பரிமாறுதல் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு இவ்வாண்டுக்கான பயிற்சிகள் இடம்பெறுகின்றன.
துறைமுக மட்டத்தில் நடைபெறும் பயிற்சிகளில் விளையாட்டுகள், யோகா பயிற்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் இதன் மூலமாக தோழமை மற்றும் நட்புறவின் பிணைப்பினை கட்டி எழுப்புவதற்கும் பரஸ்பரம் துறைசார்ந்த விடயங்களை கற்றுக்கொள்வதற்கும், அதேபோல பொதுவான பெறுமானங்களை பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் ஆகியோர் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற பயிற்சிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். ஆயுதப் படைகளின் மீதான ஆர்வத்தினையும் அதேநேரம் ஆயுதப் படைகள் குறித்த விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான விருந்தினர்கள் குறித்த இந்திய கடற்படை கப்பல்களை பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் இசைக்குழுவினர் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்துடன் இணைந்து நடத்தும் விசேட இசை நிகழ்வு கொழும்பிலுள்ள டச்சு மருத்துவமனை வளாகம் மற்றும் விகாரமாதேவி பூங்கா ஆகிய இடங்களில் முறையே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. துறைமுக அடிப்படையிலான செயற்பாடுகள், கலந்துரையாடல்கள் இப் பயிற்சியில் உள்வாங்கப்பட்டுள்ளன.
கடல் மார்க்கமான பயிற்சிகளில் கரை மற்றும் வான் எதிர்ப்பு தாக்குதல் பயிற்சிகள், கப்பலோட்டல் பயிற்சிகள், ஹெலிகாப்டர் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்களின் செயற்பாடுகள், அதிநவீன நுட்பங்கள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், விசேட படையினரின் கடல் மார்க்கமான நடவடிக்கைகள் உள்ளிட்டவை கடல் மார்க்கமான பயிற்சிகளில் உள்வாங்கப்பட்டிருப்பதுடன் இதன் மூலமாக நட்புறவைக் கொண்ட இவ்விரு கடற்கரையினரிடையிலும் ஏற்கனவே காணப்படும் இயங்குதிறனை மேலும் மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடல் மார்க்கமாக மிகவும் வலுவான பரஸ்பர ஒத்துழைப்பினை கொண்டிருக்கும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான ஆழமான ஈடுபாட்டினை இப்பயிற்சிகள் மேலும் விஸ்தரிப்பதாக அமைகின்றன. மேலும் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் பிரதமரின் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய இலங்கை கடற்படை இடையிலான தொடர்புகள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.