இரத்தினபுரியில் “தேயிலை சாயம்” புகைப்படக்கண்காட்சி

116 0

இரத்தினபுரி கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் இரத்தினபுரி லெல்லோபிட்டிய சில்வரே உல்லாச உணவகத்தில் “தேயிலை சாயம்” என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி 05 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. நாட்டில் பல பாகங்களிலும் நடைபெற்ற இக்கண்காட்சியானது முதன் முறையாக இரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது நடைபெறுகின்றது.

ஊவா சக்தி நிறுவனம், எஸ்.ஆர்.பி. நிறுவனம், மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம், ஜீ.ஐ.இசட். நிறுவனம் பிரிட்டிஸ் கவுன்ஸில் ,ஜேர்மன் கோப்பரேசன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும் அப்புகைப்படக்கண்காட்சியில் மலையக மக்களின் தினசரி வாழ்க்கை, அவர்களின் தொழில், அவர்களின் குழந்தைகளின் கல்வி முறை குறித்த பல விடயங்களை தெட்ட தெளிவாக வெளிச்சத்திற்கு  கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியின் இரண்டாம் நிகழ்வினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய  இரத்தினபுரி கலாகூடத்தின் சார்பாக உரையாற்றிய அதன் நிறைவேற்றதிகாரி நந்தலால் விக்கிரமசூரிய கூறியதாவது,

இரத்தினபுரி மாவட்டம் இன வன்முறைக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் தாக்கப்பட்டனர். குறிப்பாக 30 வருட யுத்தம் நடைபெற்ற போது அதற்கு பிரதான காரணம் தோட்ட தமிழ் மக்கள் தான் எனக்கூறி இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அப்பாவி தோட்ட மக்கள் பெரும்பான்மையின மக்களால் தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகளையும் தாக்குதலுக்குள்ளானது. இனிவரும் காலங்களில் இவ்வாறு இடம்பெறக்கூடாது என்பதற்காக இம்மாவட்டத்தில்  இப்புகைப்படக்கண்காட்சி நடாத்தப்படுகின்றது.

இக்கண்காட்சி நான்கு தரப்பினருக்கு காண்பிக்கப்பட வேண்டும் என்பது எமது ஆசை ஆகும்.

முதலாவது தரப்பினர்…

சிங்கள மொழி மூல பாடசாலை மாணவர்களுக்கு 200 வருடங்களுக்கு முன் இலங்கை வந்த பெருந்தோட்ட மக்கள் பட்ட,படுகின்ற கஷ்டங்களை  அவர்கள் புரிந்து கொள்வதுடன்  தோட்ட மலையக மக்கள் இனவன்செயலில் அல்லது இன ரீதியாக  பாதிக்கப்பட்டால் அதற்கெதிராக தென்பகுதியிலுள்ள பெரும்பான்மையின மாணவர்கள் குரல் கொடுப்பதுடன் அதனை தடுக்க முன் வருவதுடன் அவர்களும் (மலையக மக்களும்) இந்நாட்டில் பிறந்து வளர்ந்து வருபவர்கள்  அவர்களும் பெரும்பான்மையின மக்கள்  அனுபவிக்கும் சகல உரிமைகளும் சலுகைகளும் முழுமையாக் அனுபவிக்க வேண்டும். அதற்கு  பெரும்பான்மையின மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவும்,

இரண்டாவதாக தென்பகுதியிலுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு..

அதாவது  மலையக மக்கள் அன்றாடம் தேயிலை தோட்டத்தில் அளவிட முடியாத இன்னல்களை அனுபவிக்கின்றனர்.  அவர்கள் தேயிலை மலைகளில் தேயிலை பறிக்க படும்பாடு சொல்லில் அடங்காது அதனால் அதனை புகைப்படம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு அல்லல்பட்டு பறிக்கும் தேயிலை கொழுந்தை தூளாக்கி அதனை ஏற்றுமதி செய்து அதன் ஊடாக வெளிநாட்டிலிருந்து பெற்ற அந்நிய செலாவணி (டொலர்) மூலம் இலங்கையில் இலவசமாக கல்வி கற்று வெளிநாட்டில் பணிபுரிய படையெடுக்கும் புத்திஜீவிகளுக்கு உணர்த்தும் பொருட்டும்.

மூன்றாவதாக மலையக பாடசாலையில் கல்வி கற்கும் குறிப்பாக இரத்தினபுரி மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு…

கடந்த 200 வருடங்களாக உங்களது பாட்டன் தொடக்கம் இன்று வரை மலையகம் மறுமலர்ச்சியடையவில்லை அதனை மறுசீரமைக்க உங்களால் முடியும். அதற்கு சிறந்த கல்வியை பெற வேண்டுமென்பதனை  உங்களுக்கு உணர்த்துவதற்காகவும்

நான்காவதாக மலையகத்தில் வாழும் பெரியோர்கள் மற்றும் மலையக பெற்றோர்களுக்கு…

200 வருடகால மலையகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன ஆனால் ஒன்று மட்டும் இன்று வரை மாறவில்லை. அதாவது மலையக மக்ககளில் சிலர் மட்டும் குடிபோதையிலிருந்து இன்று வரை மீளவில்லை. எதற்காக மது அருந்த வேண்டும் என்பதனை சிந்திக்க வேண்டும். மதுவினால் மலையகம் அழிந்து வருகின்றது. அதிலிருந்து மீண்டு குடிபோதைக்கு செலவிடும் பணத்தை தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவிட வேண்டும்; என்பதற்காகவும் நாமும் நமது மூத்தவரும் பட்ட படுகின்ற கஷ்டங்களை நமக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவும் இப்புகைப்பட கண்காட்சி நடாத்தப்படுகின்றது.

இப்புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவருக்கும் தன்னில் மாற்றம் ஏற்படும். அவ்வாறு மாற்றமடையாது விட்டால் அவர் மனித குலத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்றார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல வர்த்தகரும் தேயிலை உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான சமன் உபசேன ,  சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி சரத் விஜயகுணவர்தன, இரத்தினபுரி பிரதே சபையின் முன்னாள் உறுப்பினர் கோபால் தம்பிராஜ் உள்ளிட்ட பெருந்திரளான தமிழ்ஈ சிங்கள மாணவர்களும் கலந்து கொண்டனர்.