முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமும், பள்ளிக் கல்வித்துறையும் செய்த தவறுகள் தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் எனும் நிலையில், அதற்காக தவறு இழைக்காத தமிழ் வழி பட்டதாரிகளை தண்டிப்பது கண்டிக்கத்தக்கது; அதை ஏற்க முடியாது.
தமிழக அரசுப் பள்ளிகளுக்கு 3209 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் தேதி வெளியிடப்பட்டு, அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 10 மற்றும் 13 ஆம் நாட்களில் வெளியிடப்பட்ட இடைக்காலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நானூற்றுக்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
அக்டோபர் மாதம் 12, 13 மற்றும் 14ம் நாட்களில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவர்கள் அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தமிழக அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ் வழியில் பயின்ற ஏராளமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை. அதன் வாயிலாக தமிழ் வழியில் பயின்றோருக்கு எந்த காரணமும் இல்லாமல் ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப் பட்டிருக்கிறது.