பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்து அந்த சட்ட மூலத்தை தோற்கடிக்கச் செய்ய வேண்டியது பொறுப்புவாய்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பாரிய பொறுப்பாகும். நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான நாடொன்றை கையளிக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரினதும் தார்மீக பொறுப்பாகும். இதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பேராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த சட்ட மூலத்திற்கு எதிராக செயற்பட வேண்டியது அவசியம் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.
அடிப்படை மனித உரிமைகளான பேச்சுத் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டு, அடிப்படை மனித உரிமைகளைக்கூட செயற்படுத்த முடியாமல் போவதுடன், அரசாங்கத்திற்கு எதிராக எதுவித கருத்தையும் தெரிவிக்க முடியாமல் போகும். மேலும், இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு, இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி மரண தண்டனையை கூட விதிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாக மெல்கம் கர்தினால் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
“நாட்டில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினரின் செயற்பாடுகளை தடுப்பதற்காக 1979 இல் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம், 1982 இல் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை பல சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. அத்துடன், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க இந்த சட்டத்தை கணிசமான முறையில் மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டும் என்று காலத்திற்கு காலம் வந்த அரசாங்கங்களிடம் வலியுறுத்தியது.
நமது நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்போதைய பயன்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகளால் செய்யப்பட்ட சில முக்கியமான பரிந்துரைகள், பயங்கரவாதத்தின் வரையறை சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்குவதாக இருக்க வேண்டும், அதைத் தடுப்பதற்கான விதிகள் மற்றும் நடவடிக்கைகள் நிறுவப்பட வேண்டும் என்ற முக்கிய அம்சங்களைக் கையாள்கின்றன. தன்னிச்சையான சுதந்திரம் பறிக்கப்படுவதை நிறுத்தவும், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போவதை தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதியன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் 2023″ எனும் சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது. பயங்காரவாத தடுப்பு சட்டத்திற்கான ஏற்ற சரியான வரைவிலக்கணத்தின்படி இந்த சட்ட மூலம் அமைய வேண்டும்.
அதை விடுத்து, தற்போது கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தில் 3 மாத காலத்திற்கு தடுப்பு காவலி வைக்க முடிவதுடன், மஜிஸ்திரேட்ட நீதவான் உத்தரவிட்டால் ஒரு வருடம் வரையிலும் தடுப்புக் காவலில் வைக்க முடியும். இதை விடவும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அல்லது செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டணையை கூட வழங்க முடியும் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தில் மரண தண்டணைகள் குறைத்துக் கொண்டு வருகின்ற காலப்பகுதியில், இந்த சட்ட மூலத்தின் மூலமாக இவ்வாறான ஏற்பாடுகள் காணப்படுகின்றமை நாட்டில் பேராபத்தை விளைவிக்கும். இதற்கு எதிராக சகல தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், பாராளுமன்றில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இந்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்து இதனை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.