மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அவரது நினைவிடம் ராமேசுவரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது நினைவை போற்றும் வகையில் நினைவிடம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், பணிகள் தொடங்க காலதாமதம் ஆவதாகவும், நினைவிடம் பராமரிப்பின்றி கிடப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் புகார் கூறினர்.
இதற்கிடையே கலாமின் முதலாமாண்டு நினைவு நாளான ஜூலை 27-ம் தேதி அவரது நினைவிடத்தில் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கலாம் நினைவிடம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசினார். அப்போது, கலாம் நினைவிடம் பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அதன்பின்னர் பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் இதுபற்றி விளக்கம் அளித்து பேசியதாவது:-கலாம் நினைவிடம் கட்டும் பணியில் தமிழக அரசு முழு ஆதரவை வழங்கிவருகிறது. இதற்காக மத்திய அரசு தரப்பில் 5 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு 1.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தந்துள்ளது. கூடுதல் நிலம் கையகப்படுத்துவதற்காக காலம் தாழ்த்த மாட்டோம். வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நிச்சயம் நடக்கும்.