மெனிங் சந்தையை வீழ்ச்சிக்குள் தள்ளும் செயற்பாடு தவிர்க்கப்பட வேண்டும்

91 0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய  வருமானத்தை  குறுகிய காலத்திற்குள்  அதிகரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் பிரதான மரக்கறி சந்தையான  மெனிங் சந்தையை வீழ்ச்சிக்குள் அரசாங்கம் தள்ளுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கம் என்ன கொள்கையில் இருந்தாலும் உடன்படிக்கையின்படி செய்ய வேண்டும். இந்நிலையில் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான நிபந்தனையும் அதில் உள்ளது. ஆனால் அரசாங்கம் வருமானத்தை அதிகரிப்பதற்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நிதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி,சுகாதாரம் மற்றும் போக்குவரத்திற்கான செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளும் இல்லாது செய்யப்பட்டுள்ளது. அதனை கொழும்பில் இருந்து பேலியாகொடைக்கு கொண்டு செல்லும்  போது வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது. இன்னும் கடைகள் கிடைக்காது வர்த்தகர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலைமையில் அங்குள்ள வர்த்தகர்களுக்கு கட்டணங்களை அதிகரித்து கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகளைக்கூட  இல்லாத  நிலையில்  வர்த்தகர்களுக்கான கட்டணங்களை 800 மற்றும் 900 வீதத்தால்  அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பாரிய அநீதியாகும்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி வருமானத்தை அதிகரிப்பதாக கூறிக்கொண்டு நாட்டின் பிரதான சந்தையான பேலியாகொட மெனிங் சந்தையை வீழ்ச்சியடைய செய்கின்றனர். இந்த வர்த்தகர்களை பாதுகாக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.