நீதித்துறை சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றமை சர்வதேசத்தின் மத்தியிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடும்.
எனவே பாராளுமன்ற சிறப்புரிமைகளை முன்வைத்து நீதித்துறை சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகக் குறிப்பிட்டு நீதிமன்றத்தை சவாலுக்குட்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் அதனை மதித்தல் என்பன அனைத்து அரச நிறுவனங்களினதும் கடமையாகும்.
அவ்வாறிருக்கையில் நீதித்துறை சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றமை சர்வதேசத்தின் மத்தியிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடும்.
அத்தோடு அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களும் முடக்கப்படக் கூடும் என்பதோடு , இது கருத்து சுதந்திரத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்தும்.
இவ்வாறான நிலைமைகள் இனிவரும் காலங்களில் ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டில் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்குமாறும் , நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் , சகல பிரஜைகளினதும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.