மாநிலங்களவையில் இன்று இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதாவை சுகாதாரத்துறை மந்திரி நட்டா தாக்கல் செய்தார்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் புதிய மந்திரிகள் அறிமுகம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் தொடங்கின.
இரண்டாம் நாளான இன்று பாராளுமன்றத்தில் இன்று இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவர்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தாக்கல் செய்தார். அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) தொடர்பான அவசர சட்டங்களுக்கு பதிலாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
முன்னதாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா பேசுகையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கூடுதல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும் என்று தெரிவித்தார்.