யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில் வைத்து ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் கார் மற்றும் உந்துருளிகளில் சென்று நிதி மோசடியில் ஈடுபடுவதாக வர்த்தகர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் இவர்கள்ஒரு வர்த்தக நிலையத்தில் சென்று நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த சமயம் சீ.சீ.ரி.வி. கமராவிலும் சிக்கியிருந்தனர்.
அதன் பிரகாரம் மோசடிநபர்களிடம் பணத்தினைப் பறிகொடுத்தவர்களில் ஒருவரின் செய்தியுடன் மோசடி நபர்கள் இருவரின் சீ.சீ.ரி கமராவில் பதிவாகிய படமும் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மோசடிக் குழுவினர் இதே பாணியில் வேலணையில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஆயிரம் ரூபா நோட்டைக் கொடுத்து 100 ரூபா ரீ லோட் செய்து மிகுதிப் பணம் 900 ரூபாவினையும் பெற்ற பின்பு 2 ஆயிரம் ரூபாவே வழங்கினேன் எனத் தர்க்கம் புரிந்த நிலையில் தன்னிடம் 2 ஆயிரம் ரூபா பணமே கிடையாது என வர்த்தகர் காசு மேசையின் லாச்சியைக் காண்பித்தநேரம் அதில் இருந்த பணத்தின அபகரித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இவ்வாறு ஓடியவர்கள் தொடர்பில் வர்த்தகர் உடனடியாகவே ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பிரகாரம் குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நேற்றய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளையில் குறித்த இருவரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.