தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை நிகழ்ச்சித் திட்டமானது இந்த வருட இறுதியில் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அப்போது நாம் இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவோம். இலங்கை தனது கடப்பாடுகளை செய்கின்றதா அல்லது இந்த சலுகையை நிறுத்த வேண்டுமா என்பது தொடர்பாக அப்போது ஆராயப்படும். என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. எனவே இலங்கை இவ்வருட இறுதியில் ஜி.எஸ்.பிளஸ் சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சய்பி வீரகேசரிக்கு விசேட செவ்வி,
கேள்வி : இலங்கையின் கடன் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியிருக்கின்றது. 2.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளன. இதனை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பார்க்கிறது?
பதில் : சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன் உதவியை அங்கீகரித்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அது இலகுவான பணி அல்ல. இலங்கைக்கு கடன் வழங்கியவர்களுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும். அதாவது நிதியியல் உத்தரவாதத்தை பெற வேண்டும்.
எனினும் சில நாடுகள் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தயக்கம் காட்டின. ஆனால் ஐரோப்பிய நாடுகள் முழுமையான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கின. இது தொடர்பில் நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்பட்டோம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியமாக நாங்கள் ஒரு விடயத்தை உணர்கிறோம். அதாவது இலங்கை போன்ற நெருக்கடி நிலைமையை எதிர்கொள்கின்ற நாடுகள் நிச்சயமாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்பதையே ஐரோப்பிய ஒன்றியம் நம்புகின்றது.
அதனைவிடுத்து நாடுகள் தனிப்பட்ட கடன்களை பெற்றுக் கொள்வது நிரந்தர தீர்வாக அமையாது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கினோம். ஒன்றியம் எப்போதும் இலங்கைக்கு இருதரப்பு கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுவதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவே இந்த செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். அதனை மிகவும் நேர்மறையான நல்லெண்ணத்துடன் பார்க்கின்றோம். இந்த வேலைத்திட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குகிறோம். ஆனால் இது மிகவும் கடினமானதாக இருக்கப் போகின்றது. எதிர்காலத்தில் பல சவால்கள் இருக்கின்றன. மறுசீரமைப்புகள் மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஏற்கனவே பல பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். மேலும் சில கடினமான நிலைமைகள் ஏற்படலாம். அதிகளவு தாராளமய நிலைமை ஏற்படும். பல அரசு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும். மானியங்கள் குறைவடையும்.
எனவே இந்த நிலைமை மக்களை அதிகளவு பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நாம் மனிதாபிமான உதவிகளை வழங்குகிறோம். உரத் தைப் பெற்றுக்கொடுப்பதற்காக செயற்படுகிறோம். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவுகிறோம். பாதிக்கப்படுகின்ற சமூகங்களை நோக்கி எமது உதவிகளை விரிவுபடுத்துகிறோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதில் உலக வங்கியுடன் இணைந்து செயற்படுகிறோம்.
கேள்வி : சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையடுத்து எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் எவ்வாறு பொருளாதார ரீதியாக இணைந்து செயற்படும் ?
பதில் : ஐரோப்பிய ஒன்றியத்தின் பல திட்டங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. குறிப்பாக சுற்றுலாத்துறை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார சுற்றுலா (Wellness tourism) தொடர்பான விடயங்களை முன்னெடுக்கின்றோம். பயிற்சிகளை வழங்குகிறோம். தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கின்றோம். இவ்வாறு பல்வேறு விடயங்களை இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை இலங்கைக்காக திறக் கப்பட்டிருக்கிறது என்பதாகும். வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இதனை திறந்துள்ளோம். இலங்கைக்கு நாம் ஒரு டொலருக்கு பெறுமதியான பொருளை ஏற்றுமதி செய்யும்போது இலங்கையிலிருந்து இரண்டு யூரோ பெறுமதியான பொருளை இறக்குமதி செய்கிறோம். மேலும் இலங்கைக்கு ஜி.எஸ்.டி. பிளஸ் வரி சலுகையை வழங்கியிருக்கிறோம். இதனூடாக பூச்சிய கட்டண அறவிடல் முறையே அமுல்படுத்தப்படுகிறது. நேரடி நிதி வழங்கலுக்கு பதிலாக நாம் இவ்வாறான செயற்பாடுகளையே முன்னெடுக்கிறோம்.
கேள்வி : அப்படியானால் நேரடி இரு தரப்பு கடன்களை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்காதா..?
பதில் : ஐரோப்பிய ஒன்றியம் இருதரப்பு கடன்களை வழங்குவதில்லை. மாறாக மானியங்களையே இலங்கைக்கு வழங்குகின்றது. நெருக்கடி காலத்தில் பல கடன் வழங்குநர்கள் இலங்கைக்கான கடன் வழங்கலை இடைநிறுத்தினர். காரணம் அது கடன்கள் என்பதாலாகும். ஆனால் நாம் மானிய உதவிகளை தொடர்ந்து வழங்குகிறோம். எனவே எந்தவொரு நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலும் எமது உதவிகள் நிறுத்தப்படவில்லை. நாம் அதற்காக மீள எதனையும் இலங்கையிடம் எதிர்பார்ப்பதில்லை.
இலங்கையின் மனிதாபிமான தேவைகளுக்கு நாங்கள் தொடர்ந்து உதவிகளை செய்துகொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இந்தியா பில்லியன் கணக்கில் இலங்கைக்கு கடனை வழங்கியது. அது கடன் வசதியாகும். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா உதவியை செய்தததை நாம் பாராட்டுகின்றோம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாக நாணய நிதியத்தின் நிகழ்ச்சியையே ஊக்குவித்துக் கொண்டிருந்தது. நெருக்கடி நிலைகளை கையாள்வதற்கு சிறந்த இடம் சர்வதேச நாணய நிதியம் என்பதை நாம் திடமாக நம்புகிறோம்.
கேள்வி : எதிர்காலத்தில் முதலீடுகளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் முன்னெடுக்குமா?
பதில் : நாம் நேரடியான முதலீடுகளை இலங்கையில் செய்யமாட்டோம். கலாசார ஊக்குவிப்பு செயற்பாடுகளுக்கு ஊக்குவிப்பு வழங்குவோம். நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவுவோம். இலங்கையில் முதலீடுகளை நாம் செய்யவில்லை. நாம் துறைமுகங்களை கொள்வனவு செய்ய மாட்டோம். உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவமாட்டோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவுவோம். எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு வங்கி இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். அதில் சலுகைக் கடன்கள் பெற்றுக் கொடுக்கப்படும். முக்கியமாக பசுமை வேலைத்திட்டங்களுக்கு இந்த வங்கி கடன் வழங்கும்.
கேள்வி : இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது. தற்போது அது மீளாய்வு செய்யப்படுவதாக தெரிகிறது. உண்மையில் என்ன நடக்கிறது?
பதில் : ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை நிகழ்ச்சித்திட்டம் 10 வருடங்களுக்கு செல்லுபடியானது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை நிகழ்ச்சித் திட்டமானது இந்த வருட இறுதியில் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அப்போது நாம் இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவோம்.
இலங்கை தனது கடப்பாடுகளை செய்கின்றதா அல்லது இந்த சலுகைகளை நிறுத்த வேண்டுமா என்பது தொடர்பாக அப்போது ஆராயப்படும். என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. எனவே இலங்கை இவ்வருட இறுதியில் ஜி.எஸ்.பிளஸ் சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். காரணம் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நிகழ்ச்சி திட்டத்துக்காக புதிய நிபந்தனைகள், புதிய ஏற்பாடுகள் முன்வைக்கப்படும்.
2024 ஆம் ஆண்டில் இலங்கை மீள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தற்போது இருப்பதை விட புதிய கடப்பாடுகள் முன்வைக்கப்படலாம். தற்போது 27 விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு இன்னும் அதிகரிக்கலாம்.
கேள்வி : இலங்கை தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானிப்படுத்தி இருக்கின்றது. இது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வை என்ன?
பதில் : 2017 ஆம் ஆண்டு இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெறும்போது பயங்கரவாத தடை சட்டத்தை மீளாய்வு செய்வதாக வாக்குறுதி அளித்தது. நாம் சட்டத்தை நீக்குமாறு கூறவில்லை. மாறாக மீளாய்வு செய்யுமாறே கூறுகின்றோம். ஐரோப்பிய ஒன்றியத்திடமும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் காணப்படுகிறது. ஆனால் எந்த ஒரு சட்டமும் சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்கவேண்டும்.
சர்வதேச தரத்துக்கு அமைவாக எனும்போது கைது மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகள்இ தடுத்து வைத்தல்இ சட்டத்தரணி ஆஜராகும் நிலைஇ ஒப்புதல் வாக்குமூலம் போன்ற விடயங்கள் சர்வதேச தரத்துக்கு அமைவாக வரையறுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தெளிவான ஒரு வரைவிலக்கணம் அவசியமாகும்.
தற்போதைய சட்டமூலத்தை நாம் மேலோட்டமாக பார்க்கின்றபோது சில கரிசனைகள் ஏற்படுகின்றன. அது மிக நீண்ட ஒரு சட்டமூலமாக இருப்பதால் அது தொடர்பாக ஆராய காலம் தேவைப்படுகிறது. இதில் சில பிரச்சினைகள் எமக்கு இருக்கின்றன. நாம் இது தொடர்பாக இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதன் பலனாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல கைதிகள் அண்மைக்காலமாக விடுவிக்கப்பட்டு வந்ததை நாம் கண்டோம். தற்போது அந்த சட்டம் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. அண்மைய அரகலய போராட்டத்தின் போது இதனை பயன்படுத்தினர்.
கேள்வி : தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்ததன் பின்னர் புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய வேண்டும். உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத் தரப்பில் விடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?
பதில் : ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதற்கு வெளியில் வாழுகின்ற இலங்கை புலம்பெயர் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதே எனது முக்கிய செய்தியாக இருக்கின்றது. அவர்களுக்குள் பலபிளவுகள் இருப்பதை நாம் பார்த்து வருகின்றோம்.
இலங்கைக்குள் உள்ள தமிழ் மக்கள் மற்றும் இலங்கைக்கு வெளியே இருக்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்தப் பிளவுகள் சரியான செய்தியை வெளிக்கொண்டு வராது. எது முக்கியம் என்பது தொடர்பான சரியான விடயத்தை இந்த பிளவுகள் வெளியே கொண்டு வராது. நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால் எப்போதும் விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும். எனவே ஒற்றுமையுடன் செயற்படுவது சில விட்டுக்கொடுப்புக்களுடன் முன்னேறி பயணிக்க உதவும். எனவே இலங்கை புலம்பெயர் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். ஒரே இரவில் முழுமையான நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்க முடியாது. அதற்கு காலம் எடுக்கும்.
கேள்வி: இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தமக்கான ஒரு அரசியல் அதிகார பகிர்வை கோரி நிற்கின்றனர். தமிழர்களின் இந்த கோரிக்கையை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்: இது மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது. இலங்கை தமிழ் மக்களுக்கு எது சரியானது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தால் தீர்மானிக்க முடியாது. இந்த மக்களின் கோரிக்கை அரசியல் ரீதியாக கையாளப்பட வேண்டும். இங்கும் ஒற்றுமை என்பது மிக முக்கியமானது.
தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். 13 ஆம் திருத்தச் சட்டம் ஏற்கனவே அரசியலமைப்பில் இருக்கிறது. இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதை அரசியல் சக்திகள் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும். முன்னரை போன்று அல்லாது எதிர்காலத்தில் யார் அதிகாரத்துக்கு வர வேண்டுமானாலும் தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு தேவையாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ராஜபக் ஷ அரசாங்கம் பெற்றது. அதில் தமிழ் மக்களின் பங்களிப்பு நிறையவே இருந்தது. மாகாண சபை தேர்தல் கூட இன்னும் நடக்கவில்லை. மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது அரசியலமைப்புக்கு முரணானது.
கேள்வி : நீங்கள் தமிழ்த் தலைவர்களை சந்தித்து பேசுகிறீர்கள். அவர்கள் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து என்ன கூறுகின்றனர் ?
பதில்: கடந்த சில வருடங்களில் தமிழ் மக்களுக்கு ஒற்றுமையாக சில வலியுறுத்தல்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் பிளவு காணப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பெற்ற வெற்றியில் பாரிய வெற்றியில் தமிழ் மக்களின் வாக்குகளும் இருந்தன. இதிலிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இலங்கையிலும் சரி வெளியிலும் சரி தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமது கோரிக்கையை ஒற்றுமையாக முன் வைத்து வலியுறுத்த வேண்டும்
கேள்வி : ஜெனிவா மனித உரிமை பேரவையில் இதுவரை இலங்கை குறித்து எட்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் அதில் பாரிய வகிபாகத்தை வகித்தது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலையை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பார்க்கிறது?
பதில் : 2015 ஆம் ஆண்டு 30 – 1 என்ற பிரேரணை இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட போது எமக்கு பாரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு இணை அனுசரணை வழங்கினோம். காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. உண்மையான நல்லிணக்கத்தை நாம் அப்போது எதிர்பார்த்தோம். ஆனால் இலங்கை அந்த பிரேரணையை அண்மையில் வாபஸ் பெற்றுக் கொண்டது.
இலங்கை இதுவரை முழுமையான நல்லிணக்கத்தை அடையவில்லை என்பதே எனது மதிப்பீடாக இருக்கிறது. தற்போது இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க குழுவை அமைப்பதற்கு முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவற்றை நாம் வரவேற்கின்றோம். ஆனால் இந்த விடயத்தில் வசனங்களை விட செயற்பாடுகளே அவசியமாக இருக்கின்றன. வார்த்தைகளை விட செயல்பாடுகள் வலிமைமிக்கவை.
கேள்வி : இலங்கை பிரதிநிதிகள் தென்னா பிரிக்காவுக்கு விஜயம் செய்து அங்குள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து ஆராய்ந்துள்ளனர். அதனை எப்படி பார்க்கிறீர்கள் ?
பதில் : வார்த்தைகளை விட செயல்பாடுகளே அவசியமாகின்றன. அதுவே அர்த்தம் மிக்கதாகவும் தாக்கமிக்கதாகவும் இருக்கும்.
கேள்வி : வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் செய்கிறது?
பதில் : பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். தமது அன்புக்குரிய உறவுகளை இழந்தவர்கள்இ சொத்துக்களை இழந்தவர்கள் என பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு மன ஆரோக்கியம் மிக அவசியமாகும். நாம் அதனை செய்கின்றோம். அதேபோன்று தொழில் முயற்சிக்கான உதவிகள்இ வாழ்வாதார உதவிகள் போன்ற திட்டங்களை முன்னெடுக்கின்றோம். ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் திட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றது.
கேள்வி : உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் இதனை எவ்வாறு பார்க்கிறது?
பதில் : அரசியலமைப்புக்கு ஏற்ப சகல விதமான தேர்தல்களும் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது எப்போதும் பிரச்சினைக்குரியதாக இருக்கும். தேர்தல்கள் அரசியலமைக்கு ஏற்ப நடத்தப்படாமல் இருப்பது கரிசனைக்குரிய விடயம். தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக பலரும் வலியுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றதை பார்க்கின்றேன்.
அதாவது நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலைவிட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்த வலியுறுத்தல்கள் அதிகமாக காணப்படுகின்றன. உள்ளூராட்சி தேர்தலுக்கான வலியுறுத்தல்களை நான் வரவேற்கின்றேன். ஆனால் இந்த வலியுறுத்தலானது சகல விதமான தேர்தல்களுக்கும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். எனினும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்.
கேள்வி : இலங்கை மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில் : இலங்கை மிகப்பெரிய ஆற்றலை கொண்டு இருக்கின்ற நாடு. இலங்கையின் அழகை ரசிப்பதற்காக அதிக அளவு வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்றனர். இலங்கை மக்களின் நேர்மைத் தன்மை வெளிநாட்டவர்களை கவர்கின்றது. ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமையுள்ளமை கவலை தருகின்றது. இலங்கை மக்கள் மிகவும் கனிவானவர்கள். கருணைமிக்கவர்கள். இலங்கை அண்மைய கால வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட நாடு அல்ல. இலங்கை மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட நாடு. மக்கள் மிகவும் கௌரவமானவர்கள்.
கேள்வி : இலங்கையின் உணவு வகைகள் பற்றி..?
பதில் : இலங்கையின் உணவுகளை நான் ருசித்து உட்கொண்டுள்ளேன். முக்கியமாக இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகள் தனித்துவமானவை. மரக்கறி வகைகள் சிறப்பானவை. இலங்கை பலாப்பழம் மிகவும் சுவையாக இருக்கும்.
நேர்காணல் – ஆர்.ரொபட் அன்டனி
படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்