அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று திங்கட்கிழமை கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் காணப்படும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்த முதலிகே குறிப்பிடுகையில்,
பல்கலைக்கழகங்களுக்குள் தற்போது அடக்குமுறைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலை மாணவர்கள் சிலர் போலியா குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வித காரணமும் இன்றி களனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் எவ்வித அடிப்படை காரணமும் இன்றி கால வரையறையின்றி மூடப்பட்டிருந்ததோடு , சுமார் 30 பேரின் மாணவர் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு;க் கொண்டிருக்கின்றன.
பேராதனை மற்றும் ருஹூணு பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான அடக்குமுறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு தீர்வினைக் கோரியே இன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் என்றார்.