14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

213 0

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த  க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விடுவித்து, அவர்களை விடுதலை செய்தார்.

இது தொடர்பாக குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த இ.திருவருள் (வயது 45), ம.சுலக்சன் (வயது 34), க. தர்சன் (வயது 33) ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 வருடங்களாக இவர்கள் தடுப்பு காவலிலும், விளக்கமறியலிலும் இருந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியன் அவர்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது  என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

அந்த சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை. இதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

மிக நீண்டகாலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது. உண்மையில் இவர்களது விடுதலை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடனும்,  தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அவர்களுடனும் கட்டியணைந்து தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.