பின்லாந்து தேர்தலில் பிரதமர் சனா மரீனின் கட்சி தோல்வி

100 0

பின்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனா மரீனின் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

200 ஆசனங்களைக் கொண்ட பின்லாந்து  பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில்,  பேத்தரி ஓர்போ தலைமையலான தேசியக் கூட்டணி எனும் வலதுசாரி கட்சி 48 ஆசனங்களை வென்றுள்ளது. கடந்த  தடவையைவிட 10 ஆசனங்களை அக்கட்சி அதிகம் வென்றுள்ளது.

ரைக்கா பியூரா தலைமையிலான, குடியேற்றவாசிகளுக்கு எதிரான, பின்ஸ் கட்சி 46 ஆசனங்களையும்  பிரதமர் சனா மரின் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி 43 ஆசனங்களையும் வென்றுள்ளன.

கடந்த தடவையைவிட சமூக ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களை அதிகம் வென்ற போதிலும், ஆசனங்கள் பட்டியலில் அக்கட்சி 3ஆவது இடத்தையே பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டு 34 வயதில் பின்லாந்து பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார்.

தேர்தலில் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சி ஆட்சியமைப்பதற்கான முதல் வாய்ப்பை பெறும்.

இந்நிலையில், புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தேசியக் கூட்டணியின் தலைவர் பேத்தரி   ஓர்போ தெரிவித்துள்ளார்.