2024 மக்களவைத் தேர்தல் | தென் சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் தேர்தல் பணி

91 0

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்தி, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை வடபழனியில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு முக்கியமானது. இதேபோல, தமிழகத்தில் 9 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.தென்சென்னை தொகுதியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மேற்பார்வையில், பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் அதிக அளவிலான திட்டங்களை பாஜக கொண்டு வந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில், விமான நிலையம் மேம்பாடு, மதுரவாயல்-துறைமுகம் சாலை மேம்பாடு, ரூ.800 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரும் 8-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

பாஜக-அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. இந்த கூட்டணி தொடரும். நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. அவரது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது கர்நாடகா தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ந்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தலில் கவனம் செலுத்துவோம். மக்களவைத் தேர்தலில் தேசிய தலைமை வழிகாட்டுதல்படி பணிகள் நடைபெறும். மத்திய அரசின் அட்சயபாத்திரம் திட்டத்தை, திமுக ஸ்டிக்கர் ஒட்டி காலை உணவுத் திட்டமாக செயல்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.