தமிழர் தாயகத்தில் பொது இடங்களிலும் வீதிகளிலும் நீதி கேட்டுப் போராட்டம் நடத்துபவர்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளதும், பிரமுகர்களினதும் இருப்பிடங்களின் முன்னால் போராட்டம் நடத்துவதே இன்று அவசரமான அவசியம்.
‘இனப்பிரச்சனைத் தீர்வே முழு இலங்கைக்குமான தீர்வு”. ‘நாட்டை முன்னேற்றத்துக்குக் கொண்டுவர இதுவே இறுதிச் சந்தர்ப்பம்”.
மேற்சொன்ன இரண்டு கூற்றுகளும் கடந்த ஒரு வாரத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு பொது நிகழ்வுகளில் ஆற்றிய உரைகளின் தலைப்பு.
1977ம் ஆண்டு முதல் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக, 45 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக, பல்வேறு துறைகளில் அமைச்சராக, ஐந்து தடவைகள் பிரதமராக பதவி வகித்த அதிஉத்தம சிங்கள பௌத்தர் இவர்.
இவரது மூதாதையர்கள் இலங்கையின் பழம்பெரும் பௌத்த விகாரைகளின் மூலவர்கள். களனி மகாவிகாரை இவர்களின் குடும்பச் சொத்து. எதற்கெடுத்தாலும் கண்டி தலதா மாளிகைக்கு ஓடிச்சென்று மகாநாயக்கர்களிடம் ஆசீர்வாதமும் ஆசியும் வேண்டி புனித நூல்களை கைகளில் ஏற்பது ரணிலின் சிறப்பம்சம்.
இந்த ஆண்டு சிங்கள தேச சுதந்திர தின விழாவில் தீர்வு பற்றி எடுத்துக் கூறுவதாக முற்கூட்டி உறுதி கூறிய இவர், தந்திரோபாயமாக இந்நிகழ்வில் உரையாற்றுவதைத் தவிர்த்துக் கொண்டார். ஆனால், அதற்கு முன்னர் சுடுகுது மடியைப் பிடி என்றவாறு வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளை அழைத்து இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசினார். பின்னர் சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்தினார். தீர்வுகளின் வரைவுகளைக் காட்டுங்கள் என்று அவர்கள் கேட்டதோடு அந்தக் கூட்டத்தொடர் முடிவு கண்டது.
பெப்ரவரி 4ம் திகதி காலிமுகத்திடல் நிகழ்வில் தமது படையினரின் அணிவகுப்பை நடத்தி ராணுவ பலத்தை வெளிப்படுத்தி, இதுதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பதுபோல காட்சி கொடுத்தார். அன்றிரவு நாட்டு மக்களுக்கு இலத்திரனியல் ஊடகங்கள் வழியாக ஆற்றிய உரையில் வழமையான அரசியல்வாதிகள் பாணியில் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை உலகுக்குக் காட்டுவதற்காக சில வார்த்தைகளை ஷரொய்லற் கடதாசி| போன்று பயன்படுத்திக் கொண்டார்.
மாறாக, இவரது ஆட்சியில் மதவாதம் விஸ்வரூபம் எடுத்து தலைவிரித்தாடுகிறது. இவரது வழிகாட்டலில் அரச இயந்திரங்கள் இதனை ஊதி வளர்க்கின்றன. தமிழரின் பூர்வீக நிலம் என்றும், தாயக பூமி என்றும் அடையாளப்படுத்தப்பட்ட வடக்கும் கிழக்குமே அதற்கான பிரதேசங்களாக்கப்பட்டுள்ளன.
ஓர் இனம், அதற்கான மொழி, அதனுடைய பிரதேசம் என்பவைகளுடன் வாழும்இடம் அதன் பூர்வீகம் என ஐ.நா.பிரகடனம் கூறுவதை ஏற்க நேரின், அந்தப் பிரதேசம் தனிநாடாகப் பிரிந்து செல்லும் தகுதி உடையது என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுள்ள சிங்களப் பேரினவாதம்இ அந்தப் பிரதேசத்தை கருவறுக்கும் திட்டமே நிலப்பறிப்பு.
1956ல் கல்ஓயாவில், இங்கினியாகல என்ற இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிங்களக் குடியேற்றம், டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதற்காகவே தமது மகன் டட்லி சேனநாயக்கவை தமது முதலாவது மந்திரிசபையில் காணி – விவசாய அமைச்சராக நியமித்து, கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்கும் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்தார் டி.எஸ்.சேனநாயக்க.
1952ல் சேர்.ஜோன் கொத்தலாவலை பிரதமராகியதிலிருந்து 1973 வரையான 22 வருடங்கள் டட்லி சேனநாயக்க, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, டாக்டர் டபிள்யு. தகநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் பிரதமர்களாக இருந்த அனைத்து கட்சிகளின் அரசாங்கத்திலும் காணி அமைச்சராகவிருந்து சிங்களக் குடியேற்றத்தை கச்சிதமாக நிறைவேற்றி வந்தவர் சி.பி.டி.சில்வா. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பொல்லனறுவ மாவட்ட காணி அதிகாரியாகக் கடமையாற்றிய இவரது கனவு கிழக்கை சிங்கள பிரதேசமாக மாற்றுவதாக இருந்தது.
1977ல் ஆட்சிக்கு வந்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தன மகாவலி திட்டத்தை வேகப்படுத்த காமினி திசநாயக்கவை அமைச்சராக்கினார். மட்டக்களப்பின் கல்குடாவுக்கு மாதுறு ஓயா என்ற பெயரில் திசை திருப்பப்பட்ட மகாவலி, பல்லாயிரம் சிங்களக் கைதிகளை குடும்பம் குடும்பமாக அங்கு குடியேற்றியது. அதன் தொடர்ச்சி இன்றும் வன்னி மாவட்டத்தை இலக்கு வைத்து அச்சுறுத்தி வருகின்றது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தியதிலிருந்து வடமாகாணம் சிங்கள படைகளின் குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது. இலங்கை ராணுவத்தின் ஐந்தில் நான்கு பங்கினர் தமிழர் தாயகத்தில் குடியேற்றப்பட்டனர். யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களாகின்றபோதிலும் ராணுவ நிர்வாகம் குறைக்கப்படவில்லை. முக்கியமாக வடக்கு கிழக்கின் எல்லைப்புறங்கள் – தென்னை மரவாடி, குச்சவெளி, நாயாறு, மணலாறு போன்ற இடங்கள் சிங்கள பிரதேசங்களாக மாற்றப்பட்டு வடக்கும் கிழக்கும் துண்டாடப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சிங்கள ராணுவத்தின் காணி அபகரிப்பின் சிறு பகுதிகள் மீளளிக்கும் ஏற்பாடுகளுக்கு பெருமளவில் பிரசித்தம் கொடுக்கும் ரணில் அரசு, அதற்கு மாற்றீடாக தமிழர்களின் புராதன சைவ வழிபாட்டு இடங்களை தொல்பொருள் திணைக்களத்தினதும், அதனுடன் இணைந்து இயங்கும் மற்றைய அரச திணைக்களங்களின் உதவியுடன் பௌத்த பாரம்பரிய நிலங்களாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழர் தாயக அரசியல் கட்சிகள், முக்கியமாக தமிழ் தேசியத்தை தங்கள் கட்சிகளின் பெயர்களுக்கு முன்னால் சூட்டியிருக்கும் கட்சிகளின் பிரமுகர்கள், அதன் தலைவர்கள் பதவிகளுக்காக கூறு கூறாகப் பிரிந்து பிளவுபட்டும் நிற்கும் சூழ்நிலையை சிங்கள் பௌத்த பேரினவாத அரசு தனக்கு சாதகமான காலமாகப் பயன்படுத்துகிறது.
காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்தும் அதற்கான பரிகாரம் கிடைக்கவில்லை. இது போதாதென்று தினமும் வெவ்வேறு தேவைக்கான போராட்டங்கள் – முக்கியமாக வழிபாட்டுத் தலங்களை மீட்பதற்கான போராட்டம் இப்போது நாளாந்தமாகியுள்ளது. எந்த விடயத்தை முறையிட்டாலும் அதற்கொரு விசாரணைக்குழு அல்லது ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பது ஒரு பகடி விளையாட்டாகிவிட்டது இலங்கை அரசியலில்.
அந்த விசாரணையின் முடிவு என்ன, அறிக்கை என்ன கூறுகிறது, அதற்குரிய நடவடிக்கை என்னவென்று எப்போதும் தெரியவராது.
தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியாகவே காலம் காலமாக இருந்து வந்த வவனியா இப்போது சிங்களப் பிரதேசமாகிவி;ட்டது. வவனியா தெற்கில் முதலாவதாக ஓர் உதவி அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டார். பின்னர் வவனியாவின் அரசாங்க அதிபரே ஒரு சிங்களவரானார். இப்போது வடமாகாண சபையின் பிரதம செயலாளராக இருப்பவர் முன்னர் வவனியா அரசாங்க அதிபராக இருந்த ஒரு சிங்களவரே.
அண்மைய நாட்களில் வவனியாவின் வெடுக்குநாறிமலை உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இங்கிருந்த ஆதி சிவனாலய சிவலிங்கம் உட்பட பல விக்கிரகங்கள் அங்கிருந்து பெயர்க்கப்பட்டு ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. குறுந்தூர் மலைப் பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீற படையினரின் பாதுகாப்புடன் பாரிய விகாரையொன்று நிர்மாணிக்கப்படுகிறது. வன்னியிலுள்ள முல்லைத்தீவின் தண்ணிமுறிப்புப் பகுதியில் இது இடம்பெறுகிறது.
எந்த நீதிமன்ற உத்தரவும் பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தாது என்ற போக்கில் இலங்கையின் சட்டத்துறை இயங்குகிறது. பிக்குகளை மீறி நீதிமன்றம் செயற்பட்டால் நீதிபதிதான் இடமாற்றம் செய்யப்படுவார்.
சிங்கள ராணுவ சிப்பாய் ஒருவர் கனவு கண்டதால் புத்தூர் நிலாவரையில் ஓரிரவில் புத்தர் சிலையொன்று வந்ததும், கச்சதீவில் தங்கியிருக்கும் கடற்படையினருக்காக அங்கு புத்தரும் அரச மரமும் முளையிட்டதும் தமிழ் பகுதிகளில்தான் நடைபெறும். சிங்கள பிரதேசங்களில் எவர் கனவிலும் புத்தர் வரமாட்டார். அங்குள்ள படையினருக்கு முகப்பில் புத்தர் வழிபாட்டுப் பகுதி கிடையாது.
இவ்வாறாக தமிழர் வாழ்விடத்தில், அவர்கள் தாயக பூமியில் நிலம் கபளீகரம் செய்யப்படுவதையும், வழிபாட்டுத் தலங்கள் நிர்மூலமாக்கப்படுவதையும் தடுப்பதற்கு எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் மக்கள் போராட முடியும்? பொருளாதார சீர்கேட்டினால் வாழ்வாதாரத்துக்கு போராடும் அப்பாவி பொதுமக்கள், வாழ்விடத்தின், வழிபாட்டிடத்தின் பாதுகாப்புக்காக போராடுவது நித்திய பணியாகிவிட்டது.
இலங்கை தொடர்பிலும் இந்துக்கள் மீதும் இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது என்பதால் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது என்று இலங்கை இந்துமா மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவிடம் உதவி கேட்பதில் எந்தத் தவறுமில்லை. கேட்கத்தான் வேண்டும்.
‘இந்த நேரத்தில் உங்கள் தலைவர்கள், உங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்?” என்று இந்தியாவிலிருந்து யாராவது திருப்பிக் கேட்டால் அதற்கு என்ன பதில் கூற முடியும்?
தேர்தல் திருவிழாக்களின்போதும் அபேட்சகர்கள் தெரிவின்போதும் கும்பிடு கையுடன் காணப்படுபவர்கள் இப்போது எங்கே தலைமறைவாகியுள்ளனர். தேர்தலின் போது ஆயிரம் ஆயிரமாக வாக்குப் பெற்ற இவர்களால் ஆகக்குறைந்தது ஓராயிரம் பேரையாவது வீதிக்கு இறக்க முடியாதா?
மீனவர் பிரச்சனைக்கு ஒற்றைப் படகில் போராட்டம் நடத்திய, விவசாயிகள் பிரச்சனைக்கு நெல் முளைத்த வயலில் ஏர் பூட்டிப் போராட்டம் நடத்திய, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்து காட்சி கொடுத்த… ரணிலினால் தங்களின் சட்டமா அதிபர் என்று புகழாராம் சூட்டப்பட்ட அந்தத் தலைவர் எங்கே போனார்?
கட்சியின் தலைமைப் பதவிக்கு சூம் வழியாக புலம்பெயர் உறவுகளுடன் கூட்டம் நடத்துபவர்களுக்கு உள்;ர் பிரச்சனைகளைத் தீர்க்க எவ்வாறு நேரம் கிடைக்கும்? தமிழர் தாயகபூமி மீதான இவர்களின் அக்கறையின்மை, பாராமுகம் ரணிலுக்கான பொற்காலம்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக அதனிலும் மோசமான பங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 3ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இதனை எவராவது ஏற்கத் தயாரில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம் என்று சவால் விடுகிறார் நீதி அமைச்சர். அடுத்த 25 ஆண்டுகளுக்கு தங்கள் கட்சியின் நிர்வாகமே ஆட்சியில் என்பதுபோல அறிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. தமக்கு எந்தப் பதவியும் வேண்டாம், தேவையானதை ரணில் தருவார் என்கிறார் மகிந்த ராஜபக்ச.
இதுதான் சிங்கள தேசத்தின் போக்கு என்றால், தமிழர் தேசம் நாசமாய்ப் போனாலும் தமிழர் தலைவர்களும் தமிழ்த் தேசிய கட்சிகளும் ஊடக அறிக்கைகளையும் ஒளிப்படக் காட்சிகளையும் தவிர வேறெதுவும் செய்ய மாட்டார்கள். தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் பிச்சைக்காரர்களாக உள்ளனர் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சில நாட்களுக்கு முன்னர் கூறியது உண்மையிலும் உண்மையாகிறது.
பொதுமக்கள் பொது இடங்களிலும் வீதிகளிலும் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளதும் பிரமுகர்களதும் இருப்பிடங்களுக்கு முன்னால் ஒன்றுகூடி போராட்டம் நடத்த வேண்டியது அவசரமான அவசியமாகவுள்ளது.
பனங்காட்டான்