சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் உலக புகழ் பெற்றதாகும். இந்தியாவில் கடம் இசைக்கருவி மானாமதுரை மண்ணில் இருந்து மட்டுமே இன்றைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இசை வித்வான்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கு கிடைக்கும் உறுதி மிக்க மண்ணால் எளிதில் உடையாத வகையில் மண்பாண்ட பொருட்கள் ஆண்டு முழுவதும் தயார் செய்யப்பட்டு வருகிறது . மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. மானாமதுரையில் குலாலர் தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியிலும் திருப்புவனம், வயல்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்டம் தயார் செய்யும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். மானாமதுரையில் மட்டும் குலாலர் தெருவில் 4 தலைமுறையாக 350-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளது. ஆண்டு முழுவதும் விதவிதமான மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர்.
இதில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது கிளியான் சட்டி எனப்படும் தீபவிளக்குகள் ஆகும். அடுத்து மண்பானை மற்றும் கூஜா கோடைகாலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பூஞ்ஜாடிகள், தொட்டிகள் அதிகம் செய்யப்படுகிறது மண்பானைகள் மட்டுமின்றி களிமண் பொம்மைகள், சரவிளக்குகள், துளசி மாடங்கள், விநாயகர் சிலை, தீப விளக்குகள், கொலு பொம்மைகள், அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், ஊறுகாய் ஜாடி என விதவிதமாக தயாரிக்கின்றனர். ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மண் பானை, குடிநீர் ஜாடிகளை அதிகளவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
கர்நாடக இசைக்கலைஞர்கள் அதிகமாக பயன்படும் இசைக்கருவியான கடம் மானாமதுரையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிரபல கர்நாடக கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயக்ராம் மானாமதுரை மண்கடத்தை ஐ.நா. சபைபில் வாசித்து மானாமதுரைக்கும் ஆதி இசைகருவியான கடத்திற்க்கு புகழ் சேர்த்தார். டிரம்ஸ் சிவமணி போன்ற பக்க வாத்திய கலைஞர்களும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இசைக்கலைஞர்களும் மானாமதுரை வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர்.
தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமாகவும் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலமும் மண்பானைகளை சந்தைப்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெருமை வாய்ந்த மானாமதுரை மண்பாண்டத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது மண்பாண்ட தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட்களை தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்த்து வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிலாளர் சங்க தலைவர் லட்சுமணன் கூறுகையில், களிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சேர்த்து தரமான மண்பாண்ட பொருட்களை எங்கள் பகுதியில் செய்து வருகிறோம்.
தனித்துவம் வாய்ந்த மானாமதுரை மண்பாண்டங்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அரசு சார்பில் உள்ள வனத்துறை, தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும், வளர்க்கப்படும் மரகன்றுகளை மண்வளத்தை அழிக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் சிறிய பூ தொட்டிகளில் வளர்க்க வேண்டும். இதற்கு அரசு உத்தரவிடவேண்டும்.
முன்பு மானாமதுரை கடத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது புவிசார் குறியீடு கிடைத்தது மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.