பாகிஸ்தான் பணவீக்கம் 35.37% ஆக அதிகரிப்பு – கோதுமை வாங்கும்போது நெரிசலில் சிக்கி ஒரு மாதத்தில் 16 பேர் பலி

91 0

பாகிஸ்தானில் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37% ஆக அதிகரித்துள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உயர்வு என்று பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உற்பத்தி குறைந்து இறக்குமதியும் குறைந்து வருவதால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டுமல்லாது அனைத்துப் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் விலை மாதத்திற்கு மாதம் உயர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் பணவீக்கம் தொடர்பாக அந்நாட்டின் முதலீட்டு நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்பரேஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 31.60% ஆகவும், ஜனவரியில் 27.60% ஆகவும் இருந்துள்ளது. கடந்த 1965-ல் இருந்து பாகிஸ்தானில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் தான் முன் எப்போதும் இல்லாத உயர்வு என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 34.6% ஆகவும், வீட்டு வாடகை பணவீக்கம் 23.60% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகளின் பணவீக்கம் 8.60% ஆகவும் இருந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் உணவுப் பணவீக்கம் 47 சதவீதம் உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை பணவீக்கம் 17.50 சதவீதமும், துணிகள் மற்றும் காலணிகளின் பணவீக்கம் 21.90 சதவீதமும், போக்குவரத்துக்கான பணவீக்கம் 54.94 சதவீதமும் உயர்ந்துள்ளது.அந்நாட்டில் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் மூலம் கோதுமை மாவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த மாதத்தில் மட்டும் 5 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.