“வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – அங்கன்வாடி ஊழியர்கள் கண்களில் கறுப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

97 0

 தேர்தல் கால வாக்குறுதியை நடப்பு பட்ஜெட் தொடரில் நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு சத்துணவு – அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் கண்களில் கறுப்புத் துணி அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராம உதவியாளருக்கு வழங்குவதுபோல், ரூ.6,850 அகவிலைப்படியுடன் ஒய்வூதியம் வழங்க வேண்டும்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்களை, அரசுத் துறை காலிப் பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கவுரியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முருகேஸ்வரி வரவேற்றார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத்லைவர் சின்னப்பொன்னு, வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் மணிகண்டன், ஐசிடிஎஸ் உதவியாளர் சங்க மாநில செயலாளர் பரஞ்ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான் நிறைவுரை ஆற்றினார்.