சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர் பட்டியலில் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள்

87 0

ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தின் ஒரு ஏற்பாடாக சொத்து மதிப்பு பிரகடனம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர் பட்டியலில் ஜனாதிபதி , முதலமைச்சர்கள் , ஆளுநர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் , ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் , உயர்ஸ்தானிகர்கள் , தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர் அலுவலகங்களில் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகள் என்போர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் சுயாதீனமானவர்கள். அரசயலமைப்பு பேரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியால் சுயாதீனமான நடைமுறையின் கீழ் அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தாம் சுயாதீனமானவர்கள் எனக் குறிப்பிட்டு பொறுப்பிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புக்கள் புதிய சட்ட மூலத்தின் ஊடாக அவர்களுக்கு கிடைக்கப் பெறாது.

ஊழில் ஒழிப்பு சட்ட மூலத்திற்குள்ளேயே சொத்து மதிப்பு பிரகடனம் குறித்த சட்டம் உள்ளடங்குகின்றது. சொத்து மதிப்பு பிரகடனம் குறித்த பழைய சட்டத்தில் அதனுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த சிக்கல் காணப்படுகிறது. அதாவது ஒரு சாரால் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் தற்போதைய சட்டத்திற்கமைய ஜனாதிபதி , மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் , ஆளுனர்கள் , உறுப்பினர்கள் , ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் , உயர்ஸ்தானிகர்கள் , தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர் அலுவலகங்களில் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

சொத்து பிரகடனத்தை சமர்ப்பிப்பதற்கான வழிமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இணையவழியூடாக சொத்து பிரகடனங்களை சமர்ப்பிக்க முடியும். குறிப்பிட்டவொரு வரையரைக்கு அப்பால் ஏதேனுமொரு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்கள் அதனையும் தமது சொத்து மதிப்பு பிரகடனத்தில் உள்ளடக்க வேண்டும்.

ஆண்டு தோறும் சமர்ப்பிக்கப்படும் சொத்து மதிப்பு பிரகடனத்தில் அவற்றுக்கிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டால் அது தொடர்பில் கண்காணிப்பதற்கான அதிகாரம் இலஞ்ச , ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. இதே வேளை தகவல்களை வழங்குபவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியமும் இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது. எனினும் நாணய நிதியத்தின் தேவைக்காக உருவாக்கப்படவில்லை. அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பினைப் பெற்று இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கின்றோம். பொருளாதார வீழ்ச்சியில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ள ஊழலை ஒழிப்பதற்கு இதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். மே மாதத்திற்குள் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம்.

முன்னைய சட்டத்திற்கமைய அமைச்சரவை அமைச்சர்கள் தமது சொத்து பிரகடனத்தை ஜனாதிபதியிடமும் , பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து பிரகடனத்தை சபாநாயகரிடமும் சமர்ப்பிப்பார்கள். எனினும் ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்திற்கமைய சகலரும் தமது சொத்து மதிப்பு பிரகடனத்தை இலஞ்ச , ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.