இலங்கையில் இந்து சமயம் மற்றும் இந்து மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலொன்று நேற்று (31) நல்லூரில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்து சமயத்தை பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு பிரதான அமைப்பினை ஏற்படுத்தல், மதமாற்றத்தை தடுத்தல், போருக்குப் பின்னர் மதமாற்றத்துக்குள்ளானோரை மீண்டும் தாய் மதத்துக்கு அழைத்தல், சிவபூமியாக இலங்கையை மாற்றும் நடவடிக்கை தொடர்பான அருட்தந்தை சக்திவேலின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடுதல், யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டு வரும் இந்து பாடசாலைகளை இந்து அமைப்புக்களிடம் வழங்குதல், பெளத்த தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான தீர்வுகளை பெறுதல், வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் அழிக்கப்பட்ட இந்துக்களின் வழிபாட்டுக்குரிய விக்கிரகங்களை மீண்டும் பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டன.
இதேவேளை சில தீர்மானங்கள் பட்டியலிடப்பட்டு, குறித்த அறிக்கை இந்திய துணைத் தூதுவராலயத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஆதீன முதல்வர்கள், இந்து சமயத் தலைவர்கள், இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.