ஜனநாயக போராட்டத்தை முடக்கும் எவ்வித ஏற்பாடுகளும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.
அவ்வாறான ஏற்பாடுகள் காணப்படுமாயின் நாட்டு மக்கள் எவரும் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம் என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் சகல தரப்பினருடன் விரிவான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு,எதிர்வரும் மூன்றாம் வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தரப்பினர் தற்போது உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்பட்டால் அனைத்தும் தவறானதாகவே தெரியும்.
ஜனநாயக போராட்டத்தை முடக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்படவுள்ளது என குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.
நாட்டில் கடந்த வருடம் ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இடம்பெற்ற போராட்டங்கள் உண்மையில் ஜனநாயக போராட்டமா என்பதை ஆராய வேண்டும்.
ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை முடக்கும் நோக்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு கிடையாது.
அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை, அவ்வாறு காணப்படுமாயின் நாட்டு பிரஜைகள் எவரும் சட்டமூலத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம்.
ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் பல்கலைக்கழக மாணவர்களை தவறான முறையில் வழிநடத்துகிறார்கள்.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை உலகில் எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாது,ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் உண்மையை விளங்கிக் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.