வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை

143 0

தாம் பணி செய்த காலத்தில் வழங்கப்படாத வேதனத்திற்கும், பணி செய்த காலத்தில் சேமித்து ஓய்வின் பின்னர் பெறப்படும் கொடுப்பனவிற்கும் பெருந்தொகை வரியை அரசாங்கம் அறவிடுவது ஒரு பஞ்சமாபாதகச் செயல் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், ஒரு ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டிய வேதனத்தை உரிய காலத்தில் வழங்காது இழுத்தடிப்புச் செய்து, அதனை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் அங்கீகாரம் கிடைத்ததும் அத்தொகை முழுமையாக வழங்கப்பட்டது.

சுமார் பன்னிரண்டு லட்சம் பெற்றுக்கொண்ட ஒருவரிடம் மூன்று லட்சம் வரியாக அறவிடப்பட்டுள்ளது. அந்த பன்னிரெண்டு லட்சமும் அவர் கடமையாற்றிய காலத்திற்கான வேதனமே தவிர விசேட கொடுப்பனவு அல்ல.

அவருக்கு வழங்க வேண்டிய வேதனத்தைத் தாமதமாக வழங்கி அதையும் பறித்தெடுப்பது கொடுமையிலும் கொடுமை.
இதைவிட ஒரு அரச ஊழியர் தனது சேவைக்காலத்தில் ஓய்வூதியத்திற்காக செலுத்தி வந்த சேமிப்புத் தொகையை ஓய்வின் பின்னர் அரசு வழங்க மறுக்கின்றது.

அவ்வாறு வழங்கினாலும் அதையும் வரி எனும் சூத்திரத்தினூடாக பறித்தெடுக்கிறது.இது அரச தாபன விதிக்கோவை, அரசியலமைப்பு, நியமன நியதி என்பவற்றை மீறும் செயலாகும்.

ஆகையால் இவற்றை வன்மையாகக் கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனித்தனியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அதனை பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கான முழு ஒத்துழைப்பையும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வழங்கும்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு ஊழியருக்கு முழுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் கடமையுணர்வோடு கஷ்டப்பட்டுப் பணியாற்றியவர்களின் வேதனத்தைப் பறித்து நாட்டை மீட்பதைவிட, அரச ஊழியர்கள் எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அல்லது விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நாட்டை மீட்கலாம்.

இந்த படுபாதகச் செயலைக் கண்டித்து அதிபர், ஆசிரியர்கள் ஒருநாள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட ஆயத்தமாக இருக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்து அதற்கான நாளை விரைவில் அறிவிப்பதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ள 0773126807 எனும் தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.