பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைவர் ரோஹினீ குமாரி விஜேரத்ன அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அதன் தலைவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரையும் உள்ளடக்கியதாக இந்தக் குழுவை அமைக்குமாறும், இதனை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய பொறுப்பை கல்வி அமைச்சை ஏற்றுக்கொள்ளுமாறும் குழுவின் தலைவர் பணிப்புரை வழங்கினார்.
இந்தக் குழுவின் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கமைய கால அட்டவணையை அடுத்த கூட்டத்தில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பதினாறு வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் விளிப்புணர்வூட்டும் நோக்கில் பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
இருந்தபோதும், பிள்ளைகளின் மனதுக்கு ஏற்ற வகையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இதற்கான பாடப்புத்தகத்தைத் தயாரிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக புத்தகங்கள் அச்சிடப்படாவிட்டாலும் ஆரம்பத்தில் ஒன்லைன் மூலம் கலந்தாய்வுகளை நடத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு கல்வியறிவூட்டப்பட வேண்டிய தேவை குறித்து மதத் தலைவர்கள், பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை விழிப்புணவூட்டுவதற்கான வேலைத்திட்டங்களையும் குறித்த குழு முன்னெடுக்க வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
திருமணத்தின் பின்னர் குடும்ப சுகாதார பிரிவின் ஊடாகப் பெண்களுக்கு வழங்கப்படும் விளிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளின் போது அவர்களின் பிள்ளைகளைப் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பிலும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டிய தேவை குறித்தும் இலங்கு கலந்துரையாடப்பட்டது.