மன்னாரில் இரு வேறு சந்தர்ப்பங்களில் 16 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இரு சந்தேக நபர்கள் நேற்று (31) மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் மன்னார், கொன்வன்ற் வீதியில் ஒருவரும், மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் மற்றொருவரும் என இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 16 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்படி, மன்னார், ஜே.ஆர்.எஸ். வீட்டுத்திட்டம் சின்னக் கடையை சேர்ந்த 37 வயது நபரிடமிருந்து 6 கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவும், கட்டுக்காரன் குடியிருப்பை சேர்ந்த 28 வயது நபரின் கெப் வாகனத்திலிருந்து 10 கிலோ 60 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது வாகனங்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.