தோட்டத்தொழிலாளர்களிற்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரிக்கான உரிமை மறுக்கப்படுகின்றது!

124 0

இலங்கையில் மலையக சமூகத்தைச் சேர்ந்த மக்களிற்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரி இல்லாதமையை சுட்டிக்காட்டி மலையக தோட்டத்தொழிலாளியொருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தோட்டத்தொழிலாளர் சமூகத்திற்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரியை அதிகாரிகள் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவத்தகம மூவாகந்த வத்தையைச் சேர்ந்த ஜீவரட்ணம் சுரேஸ்குமார் என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள்  அவர்கள்  அரசாங்க சேவைகளை அணுகுவதையும் நாட்டின் ஜனநாய செயற்பாடுகளில் பங்கேற்பதையும் உறுதி செய்யும் அந்த விடயத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என  மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மூவாங்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசிப்பதாகவும் இந்த குடும்பங்கள் எவருக்கும் நிரந்தர முகவரி இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர். எனவே மேற்படி பகுதியில் வசிக்கும் மக்கள் தபால்களை பொருட்களை தங்களின் வீடுகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவான முகவரியாக காணப்படும் மூவாங்கந்த வத்த மாவத்தகம  என்ற முகவரிக்கே அனைத்து கடிதங்களும் பொருட்களும் அனுப்பப்படுவதாக அவர் தமது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்கு என தனிப்பட்ட நிரந்தர முகவரில் இல்லை. இவர்களிற்கு அனுப்பப்படும் கடிதங்கள் மாவத்துகம பிரதான தபால் நிலையத்திற்கே அனுப்பப்படுகின்றன. தபால்காரர்கள் மூவாங்கந்த  உப தபால் நிலையத்திற்கே வழங்குகின்றனர். பின்னர் குறிப்பிட்ட தோட்டத்தின் முக்கிய அதிகாரியிடம் இந்த கடிதங்கள் வழங்கப்படுகின்றன. அவர் நம்பகதன்மை அற்ற தனது முகவர் மூலம் கடிதங்களை விநியோகிப்பதற்கான  நடவடிக்கைளை எடுக்கின்றார் என மனுதாரர் தெரிவிக்கின்றார்.