மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரலக்குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 3 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பௌத்த தேரர் என 4 பேரை நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 31) விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஈரலக்குளம் காட்டுப்பகுதியை நேற்று பகல் சுற்றிவளைத்து தேடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இராணுவ லெப்டினன் கேர்ணல், ஒரு கோப்ரல், ஒரு இராணுவ சார்ஜன்ட் மற்றும் ஒரு தேரர் ஆகிய நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் இராணுவ ட்ரக் வண்டியை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
கைதான இராணுவத்தினர் வெலிகந்தை, சாலியாபுர முகாம்களைச் சேர்ந்தவர்கள் எனவும், தேரர் பொல்காவலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.