தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை தொடர்பாக நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக கேள்வி நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “திருவண்ணமாலை மாவட்டத்தில் இருந்து ஆரணி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “8 மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் இது தொடர்பாக முடிவு எடுப்பார்” என்று தெரிவித்தார்
கும்பகோணத்தில் வலுக்கும் கோரிக்கை: கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் 20 மாதங்களுக்கு மேலாகியும், தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் உள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதல்வர் அறிவிப்பாரா? என்று தொடர்ந்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதை தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் தபால் கார்டு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வகையான அமைதி வழிப் போராட்டங்களையும் கும்பகோணம் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.