கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர் மாபெரும் சக்தியல்ல

165 0

பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர் மாபெரும் சக்தியல்ல. பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொழிற்சங்கத்தினர் அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43ஆவது படையணி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஒருசில அரச நிறுவனங்களின் பங்குகளை தனியார்மயப்படுத்தவும், ஒருசில நிறுவனங்களை முழுமையாக தனியார் மயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமையவும், வெளிநாட்டு கையிருப்பை அதிகளவில் ஈட்டிக்கொள்வதற்கும் நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

நட்டமடையும் 52 அரச நிறுவனங்கள் மற்றும் திறைசேரிக்கு சுமையாக உள்ள 2000க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களினால் தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

நட்டமடையும் பிரதான அரச நிறுவனங்களான மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஆகிய நிறுவனங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இந்த நிறுவனங்களின் விடயதானங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. நாட்டு மக்களும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளார்கள். அத்துடன் நட்டமடையும் 52 அரச நிறுவனங்கள் உட்பட ஏனைய அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கை வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நியமனம் கொள்கை அடிப்படையில் அதாவது துறைசார் நிபுணத்துவத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற வேண்டும்.

அரசியல் நியமனங்கள் வழங்கக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நட்டமடையும் அரச நிறுவனங்களை முழுமையாக விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள ஏனைய பரிந்துரைகளை செயற்படுத்த அவதானம் செலுத்தவில்லை.

தேசிய வளங்களை பாதுகாப்பது தமது கொள்கை என நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் நாட்டின் தேசிய வளங்களை எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ராஜபக்ஷர்கள் நிறுவனம் ஆகும்.

இன்று நட்டமடையும் அனைத்து அரச நிறுவனங்களின் இலாபத்தையும் ராஜபக்ஷர்கள் கொள்ளையடித்தார்கள். ஆகவே, ராஜபக்ஷர்கள் தேசிய வளங்கள் தொடர்பில் கருத்துரைக்காமல் இருப்பது சிறந்ததாக இருக்கும். தேசிய வளங்களை ராஜபக்ஷர்கள் தமது குடும்ப சொத்தாக பயன்படுத்தினார்கள்.

அனைத்து அரச நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்தி அரசாங்கம் கண்காணிப்பு பொறுப்பில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை போராட்டத்தினால் விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர் பெரியதொரு சக்தியல்ல. ஆகவே, பேச்சுவார்த்தை ஊடாக  பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொழிற்சங்கத்தினர் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.