அரசாங்கத்துடன் இணைவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 200 மில்லியன் ரூபா பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எம்மில் பணத்திற்கு அடிபணிபவர்கள் எவரும் இல்லை என்பதால் , எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்பு சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை தனிநபர் சட்ட மூலமாக கடந்த ஆண்டு மே மாதமே நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டேன். எனினும் அரசாங்கம் அதனை ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கவில்லை.
எம்மால் முன்வைக்கப்பட்ட சட்ட மூலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் , இளைஞர்களுக்கு எதிரான உள்ளடக்கங்கள் சேர்க்கப்படவில்லை.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 130 பேர் தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த 30 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான எந்தவொரு சட்ட மூலத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.
கொள்ளையர்களுடன் இருந்து கொண்டு ஜனாதிபதியால் எவ்வாறு ஊழலை ஒழிக்க முடியும்? ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள எவரும் பணத்திற்கு கீழ் படிபவர்கள் அல்ல. எனவே எம்மிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 200 மில்லியன் என பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனரே தவிர , எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையவில்லை. தேர்தல் மூலம் அரசாங்கத்தின் முடிவுகள் தெரிய வரும் என்றார்.