திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

91 0

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (31) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தினை மேம்படுத்துவதுடன், விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாவட்டத்தில் விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக உள்ள அதிகாரிகள் பற்றாக்குறை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டபோது, அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் உரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அங்கு, கடந்த பருவத்தில் செய்கையில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும், இந்த பருவத்துக்கு ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ உரமும், 225 கிலோ யூரியாவும் வழங்கப்படும் என அதிகாரிகளுக்கு டி.எஸ்.பி. அறிவித்துள்ளார்.

மேலும், இதன்போது குறைந்த வருமானம் பெறும் பயனாளிகளுக்கு இலவச அரிசிப் பொதியும் தெரிவின் அடிப்படையில் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள, விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.