மன்னாருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் அழிக்கப்படுகிறது!

92 0

ன்னார் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஆறுகள், சட்டவிரோத மணல் அகழ்வினால் அழிவுறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது என தாழ்வுபாடு பங்குத்தந்தையும் சமூகப் பணியில் ஈடுபட்டு வருபவருமான அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மண் அகழ்வை கண்டித்து நேற்று (30) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஆதரவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று மன்னாரில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் மாவட்டம் வட மாகாணத்திலேயே பல ஆறுகளை கொண்ட இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும்.

கல்லாறு, அருவியாறு, பாலியாறு, சிப்பியாறு, பூங்கொடியாறு, பறங்கியாறு, கொடிகட்டியாறு, கல்பாடியாறு இதை விட பல கிளை ஆறுகளையும் கொண்ட மாவட்டமாகும்.

இவை மண்ணுக்கு வளத்தையும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் கொடுத்து வருகின்றது.

ஆனால், கடந்த சில வருடங்களாக இந்த ஆறுகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் இந்த ஆறுகள் பாழடைந்து போகின்றன.

அதுமட்டுமல்ல, இந்த ஆறுகளுக்கு அருகாமையில் உள்ள பெரிய மரங்களும் வீழ்கின்றன.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வினால் எமது மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. மழைவீழ்ச்சி குறைகிறது.

இங்கு அகழப்படும் மணல், வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

ஒருசில மணல் அகழ்வு முதலைகளின் சட்ட விரோத செயற்பாடு காரணமாக மன்னார் அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்படுவதால் நாம் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவர்களின் சட்டவிரோத செயற்பாட்டுக்கு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதும் தெரியவருகிறது.

ஆகவே, சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.