சொகுசு காரில் 18 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற இளைஞரை இராணுவத்தினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் நேற்று (30) யாழ். அச்சுவேலி, இடைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலி, இடைக்காடு பகுதியில் இருந்து சுன்னாகத்துக்கு சொகுசு காரொன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினர் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இடைக்காடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த சொகுசு காரினை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து காரினை ஓட்டிச் சென்ற இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞர், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் காரினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் இராணுவத்தினர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.