நீதி அமைச்சர் தொழிற்சங்கங்களுக்கு விடுத்துள்ள சவால்

86 0

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்தும் எந்த விடயங்களும் இல்லை. அரசியல் நோக்கத்துக்காகவே சிலர் இவ்வாறு பிரசாரம் செய்கின்றனர். அவ்வாறு தொழிற்சங்களை கட்டுப்படுத்தும் எந்த சரத்தாவது புதிய சட்ட மூலத்தில் இருந்தால் காட்டட்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி, சிறைசாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தைவிட புதிய சட்டம் பயங்கரமானது எனவும் இதன் மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வாசிக்காதவர்களே இவ்வாறு விமர்சித்து வருகின்றனர். அவரகள் அரசியல் நோக்கத்திலேயே இவ்வாறு செயற்படுகின்றனர். தற்போது இருக்கும் சட்டம் நல்லது என்றால் புதிய சட்டம் கொண்டுவர தேவையில்லை.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டமூலம் ஊடாக  பயங்கரவாதம் என்றால் என்ன என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட மூலம் ஊடாக நீதிமன்ற தீர்ப்புக்கு அனைத்தும் கீழ் பட்டதாகும். இந்த சட்டமூலம் தொடர்பாக திருப்தியடைய முடியாதவர்கள், நீதிமன்றம் செல்வதற்கு இடமிருக்கிறது. புதிய சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நபர்கள் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் நடவடிக்கை நீதிமன்றத்தின் பூரண கண்காணிப்பின் கீழே இடம்பெறும்.

அதனால் புதிய பங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவி்ப்பவர்கள்  இந்த புதிய சட்டமூலத்தை வாசித்து பார்க்காதவர்களாகும். அவ்வாறு தொழிற்சங்களை கட்டுப்படுத்தும் எந்த சரத்தாவது புதிய சட்ட மூலத்தில் இருந்தால் முடிந்தால் காட்டட்டும் என்றார்.