இலங்கையில் இடைக்கால நீதி முறைமை மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையானர் செய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நிரந்தர தீர்வு, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்னை என்பன பின்னடைவினை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைனின் அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
17 பக்கங்களைக் கொண்டதாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.
பொறுப்புக் கூறல் தொடர்பான இலங்கையின் செயற்பாடுகள் மந்த கதியில் உள்ளதாக ஆணையாளர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மனித உரிமை விடயம் மற்றும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் என்பன குறித்து இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இடைக்கால நீதி முறைமை குறித்த நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் மந்தகதியில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியினை மீளாய்வு செய்யும்போது, மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் போதிய அளவாக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.