இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக தான் தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன நேற்று பிற்பகல் இலங்கை மன்றத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைவாக வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹ_சைன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வலியுறுத்தியதாகவும், தான் ஒருபோதும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கு தயாராக இல்லையென அவருக்கு 24 மணித்தியாலங்களுக்குள் பதிலளித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தூய்மையான அரசியல் செயற்பாட்டுடன் அமைந்த தூய்மையான அரச நிர்வாகத்தினை ஏற்படுத்துவதே தனது குறிக்கோள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தூய்மையான அரசியல் செயற்பாடுகளும்இ தூய்மையான அரசியல் கதாபாத்திரங்களுமே நாட்டின் தற்போதைய தேவைப்பாடாகக் காணப்படுகிறது என தெரிவித்த ஜனாதிபதி, தான் ஜனாதிபதி பதவியை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் தூய்மையான அரசியல் செயற்பாட்டிற்கான தனது குறிக்கோளை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையான அரசியல் இயக்கமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, எந்தவொரு இடத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒப்பந்தங்களின் மூலமாக கட்டுப்படாது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை முன்னோக்கி கொண்டு செல்ல உண்மையான அர்ப்பணிப்புடன் தான் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்கருதி சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நீதியான சமூகமொன்றினை கட்டியெழுப்புவதற்கு அரசினால் தற்போது பாரிய வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக மேலும் பல பணிகள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகளை இல்லாதொழித்து நாட்டைக் கட்டியெழுப்பும் தூய்மையான அரசியல் பயணத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.