அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த 22ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.