இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள்: அமைச்சர் மனோ தங்கராஜ்

158 0

இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ஆற்காடுஉறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,தொகுதியில் உள்ள சலமநத்தம்பகுதியில் இ-சேவை மையம்அமைப்பது குறித்தும், விளவங்கோடு உறுப்பினர் விஜயதரணி, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையம்அமைக்கும்போது அலுவலர்களுக்கான ஊதியம், இறப்பு சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதம், சேவையை இலவசமாக வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இவற்றுக்கு பதிலளித்து, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: தமிழக அரசின் 235 சேவைகள், 9720 இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தமிழகத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு மனுக்களை பரிசீலித்து இ-சேவை மையங்கள் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. 234சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் இ-சேவை மையத்தை தொடங்குவதற்கான வசதி செய்யப்பட்டு, பலர் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். 85 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அங்கு பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி வழங்கும்படி கோரியதன்பேரில் பயிற்சி வழங்கப்பட் டுள்ளது.

மேலும் பயிற்சி அளிக்க கோரிக்கை விடுத்தால் பயிற்சிஅளிக்கப்படும். சேவைகள் இலவசமாக வழங்குவது சாத்தியமில்லை. அலுவலகங்களுக்கு சென்று காத்திருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது 235 சேவைகள் வழங்கப்படுகிறது. விரைவில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட 600 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர மத்திய அரசின் சேவைகளையும் இதில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இதுதவிர, 12,525 கிராமங்களுக்கும் ‘டான்பிநெட்’ திட்டத்தின்கீழ், பைபர் ஆப்டிகல் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்ததும் இணைப்பு வேகம் அதிகரிக்கும். இ-சேவை மையத்தில் பணியாளர்களை அரசுநியமிக்க முடியாது. அதே நேரத்தில்,பணியாளர்களுக்கு குறிப்பிட்டதொகை அதாவது ரூ.100-க்கான சேவையில் ரூ.70 வழங்கப்படுகிறது.

இறப்பு சான்றிதழ் பொறுத்தவரை, சான்றிதழ்களை யாரும் நிறுத்தி வைக்க முடியாத வகையில் மாற்றியுள்ளோம். அதில் ஒளிவுமறைவற்ற தன்மையில் சேவை வழங்கப்படுகிறது. நீண்ட நிலுவை இருந்தால், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தரப்படுகிறது. விரைவில் இ-சேவை 2.0 திட்டம்செயல்படுத்தப்படவுள்ளது. அப்போது இன்னும் விரைவாக சேவைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.