பணவீக்கம் அதிகரித்த போது பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட உணவு பொருட்களின் விலை பணவீக்கம் குறைவடைந்த பின்னரும் குறைவடையவில்லை. நுகர்வோர் அதிகார சபை என்பதொன்று உள்ளதா, இல்லையா என மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
நுகர்வோரின் நலனுக்காக செயற்பட முடியாவிட்டால் நுகர்வோர் அதிகார சபையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
தலங்கம பகுதியில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த ஆண்டின் இறுதி பகுதியில் பணவீக்கம் 70 சதவீதத்திற்கு உயர்வடைந்த போது உணவு பொதி உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. வியாபாரிகள் பணவீக்கத்திற்கு நிகராக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நிர்ணயித்தார்கள்.
பணவீக்கம் தற்போது வீழ்ச்சியடைந்து செல்கிறது,ஆனால் உணவு பொருட்களின் விலை குறைவடையவில்லை. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் சேவை துறைகளின் விலை குறைப்பு ஊடாக மாத்திரமே நிவாரணம் வழங்க வேண்டும்.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது,ஆனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது, வியாபாரிகள் உணவு பொருட்களின் விலைகளை தீர்மானித்துக் கொள்கிறார்கள்,
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்,அதனை விடுத்து நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி இலாமடையும் வர்த்தக மாபியாக்கல் விலையை நிர்ணயித்துக் கொண்டால் அரசாங்கத்திற்கான தேவை ஏற்படாது, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானித்தார்கள். இறுதியில் கோட்டபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பில் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனை விடுத்து தேவையற்ற காரணிகளில் அவதானம் செலுத்த கூடாது. அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையை கோப் குழுவுக்கு அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது சந்தையில் பொருட்களின் விலை குறித்து ஆராய முடியாது,ஆனால் பொருட்களின் விலையை நிர்ணயிக்க முடியும் என குறிப்பிட்டார்கள்.
நுகர்வோரின் நலனை கருத்திற் கொண்டுநுகர்வோர் அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.ஆகவே நுகர்வோருக்காக நுகர்வோர் அதிகார சபை செயற்படாவிட்டால் அதனை இரத்து செய்வது சிறந்ததாக அமையும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளேன் என்றார்.