கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமை தவறான தீர்மானமாகும்

97 0

அரசியல் அனுபவமற்ற கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமை தவறான தீர்மானமாகும்.

அரசியல் ரீதியில் பாரிய தவறிழைத்தோம் என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்கிறோம். இந்த தவறை மீண்டும் செய்ய கூடாது என்பதற்காகவே அரசியல் ஆளுமை உள்ள ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

அரசியல் அனுபமற்றவருக்கு இனி ஆதரவு வழங்க போவதில்லை என்பதை கட்சி என்ற ரீதியில் எடுத்துள்ளோம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பண்டாரகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஒரு சக்தியாக உள்ளது.இந்த சக்தியில் இருந்து மக்களால் விடுபட முடியாது.ஒன்றிணையவும் முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல்வேறு பரிணாமத்தில் வளர்ச்சிப் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சேவையை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கட்சி தலைவராக இருந்தாலும் அவர் கட்சியின் சகல உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பார்.யுத்தத்தை முடிப்பேன் என்ற தீர்மானத்தை அவர் கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எடுத்தார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்தார்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களையும் தேசிய அபிவிருத்தி திட்டத்திற்குள் உள்வாங்கினார்.நாட்டை இல்லாதொழித்தவர்கள் தற்போது 75 வருடகால ஆட்சிமுறையை சபிக்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எடுத்த தீர்மானம் ஒன்று தவறாகிறது.அரசியல் செய்யாத கோட்டபய ராஜபக்ஷவை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது தவறு,

இந்த தவறு தொடர்பில் கட்சிக்குள் சுயவிமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு,அரசியலில்ல ஈடுபடாத ஒருவரை இனி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவோ அல்லது ஆதரவளிக்கவோ கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம்.எமது தீர்மானம் தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் போது ஒரு தரப்பினர் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவையும்,எமது தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் பரிந்துரை செய்தனர்.நாடு எதிர்க்கொண்டுள்ள மோசமான நிலையை ஆராய்ந்து நாட்டை இல்லாதொழிக்க வேண்டுமாயின் டலஸ் அழகபெருமவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்,பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரம் தான் முன்னெடுக்கப்பட்டது. நாட்டை இல்லாதொழிக்க ஒரு சில தொண்டு நிறுவனங்கள் அரகலயவின் முன்னிலை தரப்பினருக்கு நிதியுதவி வழங்கினார்கள்.

இவ்வாறான பின்னணியில் நாட்டின் ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு  வழங்கினோம்.கட்சி என்ற ரீதியில் ஒருமுறை தவறிழைத்தோம், அந்த தவறை மீண்டும் செய்ய போவதில்லை என்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. சரியான தீர்மானத்தை எடுத்து கட்சி என்ற ரீதியில் முன்னேறி செல்வோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுடன் அரசியல் ரீதியில் முரண்பாடுகள் காணப்படுகிறது,ஆனால் தனிப்பட்ட ரீதியில் எவ்வித முரண்பாடும் கிடையாது. அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டு நாங்கள் எடுத்த தீர்மானத்தால் நாடு இன்று பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசி;ங்கவின் அரசியல் ஆளுமையை நாங்கள் மதிக்கிறோம் என்றார்.