முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தேர்தலை அடிப்படை ஜனநாயக உரிமை என சுட்டிக்காட்டிய சர்வதேசம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தற்போது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எதிர்காலத்தில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பண்டாரகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுதுஜன பெரமுனவின் கட்சி காரியாலயம் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மீள் எழுச்சியை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியில் நாடு பல்வேறு துறைகளில் அபிவிருத்தியடைந்துள்ளது.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடு சித்தரிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன தேர்தலுக்கு பயம் என்ற நிலைப்பாட்டை எதிர்தரப்பினர் தோற்றுவிக்கிறார்கள். மக்களை அடிப்படையாக கொண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம், ஆகவே தேர்தலை கண்டு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. தேர்தலை உரிய காலத்திற்கு முன்னர் நடத்திய குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக்ஷ மீது உள்ளது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் தேர்தலை ஜனநாயகம், மற்றும் மனித உரிமையாக கருதிய சர்வதேசம் இன்று போராட்டத்தை ஜனநாயகமாகவும்,மனித உரிமைகளாகவும் சித்தரிக்கின்றன. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேசம் கருத்துரைக்கவில்லை.
கட்சி என்ற ரீதியில் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கொவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றினார், பொருளாதாரமா அல்லது மனிதர்களின் உயிரா என்ற கேள்வி எழுந்த போது நாட்டு மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் முன்னெடுத்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் ஒருசில தவறான தீர்மானங்களை மேற்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் உரம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவில்லை, இருப்பினும் தீர்மானம் விரைவாக செயற்படுத்தப்பட்டதால் உரிய இலக்கை அடைய முடியவில்லை.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல்,பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் வலுவான முறையில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றிப்பெறுவோம். அரகலய எந்த நோக்கத்துடன் தோற்றம் பெற்றது என்பதை நாட்டு மக்கள் தற்போது அறிந்துக் கொண்டுள்ளார்கள் என்றார்.